போர் வீரர்களின் நலன்புரி குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் முன்னேற்றம் குறித்து மீளாய்வு கூட்டம் நடைபெற்றது

பெப்ரவரி 25, 2025

நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த போர்வீரர்களின் குடும்பங்கள், போரில் காயமடைந்த மற்றும் ஓய்வுபெற்ற போர்வீரர்களின் நலன்புரி தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கான மற்றொரு கலந்துரையாடல் பாதுகாப்பு பிரதி அமைச்சர்  மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் நேற்று (பிப்ரவரி 24) கொழும்பிலுள்ள அவரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

முந்தைய கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட முடிவின்படி, ஓய்வுபெற்ற, இறந்த, ஊனமுற்றோர், போரில் காணாமல் போனவர்கள், சட்டப்பூர்வமாக பணிநீக்கம் செய்யப்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது விதவைகள்/குடும்ப உறுப்பினர்கள் தொடர்பான சரியான தகவல்களைப் பெறுவதற்கும் அவர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வுகளை அளிப்பதற்கும்  பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் ரணவிரு சேவா அதிகாரசபையின் சிறப்பு தொடர்பு மையத்தை உடனடியாக நிறுவுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

மேலும், தற்போதுள்ள பிரச்சினைகள் குறித்து புகாரளிக்க ஒரு விசேட hotline இலக்கத்தை அறிமுகப்படுத்தவும், அதன் மூலம் கிடைக்கபெற்ற புகார்களை உரிய துறையினருக்கு அறிவித்து    தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் மேலும் அவை தொடர்பில் பின்னூட்டலை  பெற்று எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் புகாரளித்தவர்களுடன் தொடர்புகொண்டு   அறிவிக்க தேவையான நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் பிரதி அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

இந்த விசேட குழு, உயிர்நீத்த போர் வீரர்களின் குடும்பங்கள் மற்றும் போரில் காயமடைந்த போர் வீரர்களின் நீண்டகால பிரச்சினைகளை முறையான வழிமுறையின் மூலம் அடையாளம் காணவும், இதுவரைக்கும் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்கவும் பாதுகாப்பு பிரதி அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இக் கலந்துரையாடலில் நிதி அமைச்சின் மேலதிக செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் - பாதுகாப்பு, ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவர், ஓய்வூதியத் திணைக்களத்தின் பணிப்பாளர், முப்படைகளின் தலைமை அதிகாரிகள், முப்படைகளின் நலன்புரி பணிப்பாளர்கள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.