இலங்கையின் விரிவான கடல்சார் உத்திக்கான தேவையை
பாதுகாப்பு பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்

மார்ச் 09, 2025

இந்து சமுத்திர பிராந்தியத்தில் (IOR) ஒரு தீவாக, இலங்கைக்கு பொருளாதார, அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் பரிசீலனைகளை ஒருங்கிணைக்கும் நன்கு வரையறுக்கப்பட்ட கடல்சார் உத்தி தேவைப்படுகிறது. வேகமாக வளர்ந்து வரும் பிராந்திய மற்றும் உலகளாவிய இயக்கவியல் சகாப்தத்தில், வளர்ந்து வரும் சவால்கள் மற்றும் வாய்ப்புகளை நிவர்த்தி செய்ய ஏற்கனவே உள்ள கடல்சார் கொள்கைகளை மறுஆய்வு செய்வது அவசியமாகியுள்ளது.

இந்த சூழலில், கூட்டு கடற்படை பயிற்சிகள், நிகழ்நேர தகவல் பகிர்வு மற்றும் திறன் மேம்பாடு போன்ற கூட்டு முயற்சிகள் அவசியப்படும். இவை கடல்சார் பாதுகாப்பு உத்திகளில் புத்தாக்கங்களை ஊக்குவிப்பதுடன் பிரதான பங்குதாரர்களிடையே நிபுணத்துவ பரிமாற்றத்தையும் எளிதாக்கும்.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) Maritime Domain Awareness (MDA) கருத்தரங்கின் தொடர்பாடல் இரவு விருந்தில் நிகழ்த்திய உரையின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த நிகழ்வு நேற்று (மார்ச் 5) கொழும்பு சினமன் லைஃப் City of Dreams ஹோட்டலில் நடைபெற்றது.

இலங்கை கடற்படை மற்றும் ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல் அலுவலகம் (UNODC) ஆகியவற்றுடன் இணைந்து, Geopolitical Cartographer, இந்து சமுத்திர சிந்தனைக் குழு மற்றும் இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகம் ஆகியவற்றால் இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் புவிசார் Geopolitical Cartographerன் (GC) நிர்வாக இயக்குநர் ரிஷான் டி சில்வா, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அதிமேதகு Akio Isomata, மற்றும் வெளியுறவுத் துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர முக்கிய பேச்சாளர்களாக கலந்து கொண்டனர்.

இந்த கருத்தரங்கில், துறைசார் வல்லுநர்களின் விளக்க உரைகள் இடம்பெற்றன, அதைத் தொடர்ந்து "தெற்காசியாவில் கடல்சார் விழிப்புணர்வை மேம்படுத்துதல்: சவால்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு" என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலை ரியர் அட்மிரல் ஜகத் ரணசிங்க (ஓய்வு) கொண்டு நடத்தினார். ஜப்பான் கடலோர பாதுகாப்பு படையின் திரு. Shinnosuke Nakata, UNODC இன் சிரேஷ்ட திட்ட அதிகாரி திருமதி ஷஃபினா ஆயிஷாத், இந்திய உலக விவகார கவுன்சிலின் இயக்குநர் (ஆராய்ச்சி) டாக்டர் நிவேதிதா ரே மற்றும் மாலத்தீவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான திரு. அமீன் பைசல் ஆகியோரும் இந்நிகழ்வில் உரையாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கடற்படை மற்றும் UNODC ஆகியவற்றின் ஆதரவுடன் திக்கோவிட்டாடை மீன்பிடி துறைமுகத்தில் கப்பல் ஏறுதல், தேடுதல் மற்றும் பறிமுதல் (VBSS) குறித்த நடைமுறை பயிட்சி ஒன்றும் நடத்தப்பட்டது, இது பங்கேற்பாளர்களின் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த புரிதலை மேலும் மேம்படுத்த உதவியாக அமைந்தது.

இந்நிகழ்வில், இராஜதந்திரிகள், பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள், பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், தொழில்முறை அமைப்புகள், சர்வதேச மற்றும் பிராந்திய கூட்டு நிறுவனங்கள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு மற்றும் தொடர்புடைய துறைகளில் நிபுணர்கள் உட்பட பலரம் கலந்துக்கொண்டனர்.