‘சுத்தமான இலங்கை’ தேசிய திட்டத்தின் கீழ் முப்படையினரால் மேற்கொள்ளப்படும் பாடசாலைகள் மறுசீரமைப்பு பணிகள், பாதுகாப்பு அமைச்சின் முழு மேற்பார்வையுடன் நாடளாவ ரீதியில் வெற்றிகரமாக நடைபெறுகிறது
மார்ச் 11, 2025அரசாங்கத்தின் 'சுத்தமான இலங்கை' தேசிய திட்டத்திற்கு இணங்க, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், நாடளாவ ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் பாடசாலைகளை சுத்தம் செய்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகள் முப்படைகளின் ஆதரவுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பெப்ரவரி 20 (2025) ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், தற்போது அதன் இரண்டாம் கட்டமாக செயல்படுத்தப்படுகிறது. மார்ச் 10 (2025) திகதி வரை, இலங்கை இராணுவ வீரர்களின் பங்களிப்புடன் 432 பாடசாலைகளும், விமானப்படை வீரர்களின் பங்களிப்புடன் 34 பாடசாலைகளும், கடற்படை வீரர்களின் பங்களிப்புடன் 25 பாடசாலைகளும் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்திற்கு, சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஆதரவும் தொழிலாளர் பங்களிப்பும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தின் கீழ் பாழடைந்த பாடசாலை கட்டிடங்கள், பழுதடைந்த மேசைகள், நாற்காலிகள், புத்தக அலமாரிகள் மற்றும் பிற பள்ளி உபகரணங்கள் பழுதுபார்க்கப்பட்டு, வண்ணம் தீட்டப்பட்டு, பாடசாலை வேலிகள் புதுப்பிக்கப்பட்டு, உள்கட்டமைப்புவசதிகள் அபிவிருத்தி செய்யப்படுன்றன.
"சுத்தமான இலங்கை" தேசிய முயற்சிக்கு, இலங்கையின் முப்படைகளும் அதன் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்கள் மூலம் தீவிரமாக பங்களித்து, தொடர்ந்து ஆதரவளித்தும் வருகின்றன. இது நாட்டின் பாடசாலைகளில் கற்றல் மற்றும் கற்பித்தல் சூழலை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன், அரசாங்கத்தின்" வளமான நாடு, அழகான வாழ்க்கை" என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன் முப்படைகள் பாதுகாப்பு அமைச்சின் முழு மேற்பார்வையின் கீழ் செயல்படுகின்றன.