அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைத் தளபதி பாதுகாப்பு
பிரதி அமைச்சரை சந்தித்தார்
மார்ச் 20, 2025
அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைத் தளபதி (USINDOPACOM) அட்மிரல் Samuel Paparo, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (மார்ச் 20) சந்தித்தார்.
இச் சந்திப்பின் போது, அட்மிரல் Paparo வும் பிரதி அமைச்சரும் பல்வேறு இருதரப்பு பாதுகாப்பு விடயங்கள் குறித்து கலந்துரையாடினர். பிராந்திய ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்காக பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.
இந்தோ-பசிபிக் பகுதியில் பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அமெரிக்காவின் தொலைநோக்கை கோடிட்டுக் காட்டும் அதே வேளை, அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீடித்த பாதுகாப்பு கூட்டாண்மையை அட்மிரல் Paparo வலியுறுத்தினார். இலங்கைக்கு ஆதரவளிப்பதில் அமெரிக்காவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார், மக்களுக்கு இடையேயான உறவுகளின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு, பாரம்பரியமற்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்ய கடல்சார் கள விழிப்புணர்வு (MDA) உதவி, தொழில்நுட்ப அறிவு பகிர்தல் மற்றும் கடல்சார் பாதுகாப்பு உத்தியின் வளர்ச்சிக்கு நிபுணத்துவ உதவி பகிர்வு போன்றவற்றை எடுத்துக்காட்டினார்.
அட்மிரல் Paparo வின் வருகை, இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், இந்தோ-பசிபிக் பகுதியில் பகிரப்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்கும் அமெரிக்காவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர், லெப்டினன்ட் கேர்ணல் Anthony Nelson, நிர்வாக உதவியாளர் Captain Toraason அரசியல் ஆலோசகர் David Ranz மற்றும் கமாண்டர் Rama Mutyala ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்துக்கொண்டனர்.