இலங்கை பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்
மார்ச் 28, 2025இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் (DA) கேர்னல் டெரன் வூட்ஸ், செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொலும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இச் சந்திப்பின் போது, இருவரும் சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டனர், இதன் போது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்கான உறுதிப்பாட்டை பிரதி அமைச்சர் வலியுறுத்தினார். இலங்கை பாதுகாப்பு படையினருக்கு பிரித்தானிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பயிற்சி வாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்ப உதவிக்கு தனது நன்றியை தெரிவித்தார்.
இலங்கை தேசிய நீர்வரைப்பியல் அலுவலகம் (SLNHO) மற்றும் ஐக்கிய இராச்சிய நீர்வரைப்பியல் அலுவலகத்துக்கிடையே (UKHO) சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட இருதரப்பு ஒப்பந்தத்திற்கும் மேஜர் ஜெனரல் ஜெயசேகர (ஓய்வு) தனது நன்றியைத் தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் தேசிய பாதுகாப்பை மேம்படுத்தவும், பொருளாதார நன்மைகளை உருவாக்கவும் உதவும் அத்துடன் இலங்கையின் நீர்வரைப்பியல் திறனையும் வலுப்படுத்தும் என்றும் தெரிவித்தார். அத்துடன் இந்த மூலோபாய ஒப்பந்தம் நிதி மற்றும் தொழில்நுட்ப நன்மைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில் நாட்டின் கடல்சார் தரவுகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யும்.
கடல்சார் கள விழிப்புணர்வு (MDA) மற்றும் பாதுகாப்பு மதிப்பாய்வுகளில் நிபுணத்துவ பரிமாற்றத்தில் பயிற்சி, திறன் மேம்பாட்டு முயற்சிகள் ஆகியவற்றில் இங்கிலாந்தின் தொடர்ச்சியான ஆதரவை கேர்னல் வூட்ஸ் இங்கு உறுதிப்படுத்தினார். அத்துடன் House of Lords மற்றும் Royal College of Defence Studies (RCDS) உறுப்பினர்கள் உட்பட ஒரு உயர்மட்டக் குழு 2025 மே மாதம் இலங்கைக்கு வருகை தர திட்டமிட்டுள்ளதாகவும் என்று அவர் அறிவித்தார்.