இலங்கைக்கு ஜப்பான் தொடர்ந்து வழங்கும் உதவிகளைப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் பாராட்டினார்

ஏப்ரல் 03, 2025

‘இந்து சமுத்திரத்தில் அதன் மூலோபாய அமைவிடம் காரணமாக, பிராந்திய கடல்சார் பாதுகாப்பில் இலங்கை முக்கிய பங்கு வகிக்கிறது. தேசிய பாதுகாப்பு மற்றும் கடல்சார் கள விழிப்புணர்வில் (MDA) கடல்சார் பாதுகாப்பு உத்தி முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது’.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) புதன்கிழமை (ஏப்ரல் 2) கொழும்பு துறைமுகத்தில் ஜப்பான் கடல்சார் சுய பாதுகாப்புப் படை (JMSDF) கப்பலான JS Bungoவுக்கு விஜயம் செய்த போது இவ்வாறு தெரிவித்ததுடன் கடல்சார் பாதுகாப்பிற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

 தனது விஜயத்தின் போது பிரதி அமைச்சர் ஜப்பானிய கப்பலையும் பார்வையிட்டார். இந்தோ-பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு நிலைநிறுத்தல் 2025 இன் ஒரு பகுதியாக, இரண்டு ஜப்பானிய கப்பல்கள், JS Bungo மற்றும் JS Etajima இலங்கைக்கு வருகைதந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதி அமைச்சர் தனது உரையில், பல்வேறு துறைகளில் இலங்கைக்கு அளித்த உதவியை நினைவுபடுத்தினார். நிதி, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, மேம்பாட்டுத் திட்ட செயல்படுத்தல், மனிதாபிமான உதவி, திறன் மேம்பாட்டு முயற்சிகள், அமைதி காக்கும் பணிகள், பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு மேம்பாடுகள் மற்றும் அறிவுப் பகிர்வு போன்ற துறைகளில் கிடைத்த ஆதரவு தொடர்பிழும் அவர் நன்றி தெரிவித்தார்.

நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அதிமேதகு அகியோ இசோமாடா, இரு நாடுகளுக்கும் இடையிலான நேருங்கிய இருதரப்பு உறவுகளை எடுத்துரைத்தார், மேலும் இந்து சமுத்திரத்தில் கேந்திர முக்கியத்துவம்மிக்க அதன் அமைவிடத்தின் மூலமாக பிராந்திய ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதில் இலங்கையின் அர்ப்பணிப்பை வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் நடைபெற்ற பாரம்பரிய 'ககாமி பிராகி, 'சாகே பீப்பாய்களை உடைத்தல் மற்றும் சமுராய்களின் பாரம்பரிய 'கெண்டோ'தற்காப்பு கலை அங்கங்கள் சமூகமளித்திருந்த அதிதிகளின்  கவனத்தை ஈர்த்தது.  

இந்த நிகழ்வில் இலங்கை இராணுவம் மற்றும் கடற்படைத் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (பாதுகாப்பு), இராஜதந்திரிகள் மற்றும் இரு ஜப்பானிய கப்பல்களின் கட்டளை அதிகாரிகள் உட்பட விசேட அதிதிகள் பலரும் கலந்துக் கொண்டனர்.

மேலும், இந்த கப்பல்களின் விஜயம் இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான வலுவான பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன், பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை வலுப்படுத்தவும் உதவும்.