இலங்கை முப்படை நிவாரணக் குழு மியான்மாரில் மனிதாபிமான நடவடிக்கைகளில் மும்முரத்துடன் ஈடுபட்டு வருகிறது
ஏப்ரல் 11, 2025முப்படைப் வீரர்களைக் கொண்ட சிறப்பு மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணக் குழு, அண்மையில் மியான்மாரில் ஏட்பட்ட பூகம்பத்ததை தொடர்ந்து நடந்து வரும் அனர்த்த நிவாரண பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.
கடந்த வாரம் மியான்மாருக்கு வந்தடைந்த இக்குழு, பூகம்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான Nay Pyi Taw மாகாணத்திற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 10), அவர்கள் Pobba Thiri நகரத்திற்கு வந்தடைந்ததிலிருந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றது. அங்கு பாதிக்கப்பட்ட மக்களின் மருத்துவ தேவைகளை நிவர்த்தி செய்ய மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றது.
பாதிக்கப்பட்டு தற்போது இடம்பெயர்ந்தோர் (IDP) நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பெண்கள், குழந்தைகள் உட்பட அனைவரின் மருத்துவ தேவைகளை நிவர்த்தி செய்துவருகின்றனர். இந்நிலையங்கள், அந்நாட்டு வர்த்தக அமைச்சினால் நிறுவப்பட்டுள்ள Lat Lok Toun Lat விகாரை மற்றும் Mashikhana மடாலயம் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண நிலையங்களும் அடங்கும்.
காயங்களுக்கு சிகிச்சை அளித்தல், தொற்று நோய் நிவாரணம் மற்றும் முகாமை, மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் பொது நல்வாழ்வை உறுதி செய்தல் உள்ளிட்ட அவசர சுகாதாரத் தேவைகளை இந்த நடமாடும் மருத்துவப் பிரிவுகள் பூர்த்தி செய்து வருகின்றன. உடனடி மருத்துவ பராமரிப்புக்கு மேலதிகமாக, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு திரும்ப உதவும் வகையில் உளவியல் ஆதரவு மற்றும் சுகாதாரக் கல்வியையும் அவர்கள் வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் அவசர நிலைமைகளுக்கு ஆதரவளிக்க இலங்கை ஆயுதப்படைகளின் உறுதியான மனிதாபிமான அர்ப்பணிப்பு மற்றும் பிராந்திய ஒற்றுமையை தற்போது மியன்மாரில் மேட்கொள்ளப்பட்டுவரும் நிவாரண நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுவதாக அமையும். மேலும் உள்நாட்டு மற்றும் சர்வதேச மீட்பு குழுக்களுடன் இணைந்து இலங்கை குழு நிவாரண நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுவரும் என்பது குறிப்பிடத்தக்கது.