புனித தந்த சிறப்பு கண்காட்சிக்கான ஏற்பாடுகளை
பாதுகாப்பு செயலாளர் ஆய்வு செய்தார்
ஏப்ரல் 16, 2025
ஏப்ரல் 18 முதல் 27 வரை பொதுமக்களுக்கு திறந்திருக்கும் புத்தரின் புனித தந்த சின்னத்தின் சிறப்பு கண்காட்சிக்கான ஆயத்த ஏட்பாடுகளை ஆய்வு செய்ய பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா(ஓய்வு) இன்று (ஏப்ரல் 16) கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்தார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் பணிப்பின் பேரில் இந்த சிறப்பு கண்காட்சி ஏப்ரல் 18 ஆம் திகதி, பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு திறந்திருக்கும். அதன் பின், ஏப்ரல் 19 முதல் 27 வரை, தினமும் மதியம் 12:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை மக்களின் காட்சிக்கு வைக்கப்படும்.
16 ஆண்டுகளுக்குப் பிறகு பௌத்த சமூகத்திற்கு இந்த அரிய ஆன்மீக வாய்ப்பை வழங்கியதற்காக மகாநாயக்க தேரர்களுக்கு பாதுகாப்பு செயலாளர் தனது நன்றியைத் தெரிவித்தார். இலங்கை முழுவதும் உள்ள பக்தர்கள் புனித தந்தத்தை வணங்குவதற்கான வாய்ப்பை மிகவும் உயர்வாக மதிக்கிறார்கள் என்பதை அவர் எடுத்துரைத்தார்.
இந்த பத்து நாள் காலகட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் இதட்கு கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் வழிபாட்டில் ஈடுபடுவதை உறுதி செய்வதற்கான கூட்டுப் பொறுப்பை பாதுகாப்புச் செயலாளர் இங்கு அடிக்கோடிட்டுக் காட்டினார், மேலும் அனைவருக்கும் ஒரு சுமூகமான மற்றும் மரியாதைக்குரிய அனுபவத்தை வழங்குவதில் அரசாங்கத்தின் முழு அர்ப்பணிப்பையும் உறுதிப்படுத்தினார். அதற்கமைய, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முப்படைகளும் போலீஸாரும் இணைந்து விசேட பாதுகாப்பு திட்டமொன்றை செயல்படுத்தி வருவதாகவும், தேவையான அடிப்படை வசதிகளை தொடர்ச்சியாகவும் இடையூறு இல்லாமல் வழங்க தேவையான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாகவும் மகாநாயக்க தேரர்கள் தலைமையிலான மகா சங்கத்தினரிடம் அவர் தெரிவித்தார்.
பாதுகாப்புச் செயலாளருடன் இராணுவத் தளபதி, பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் (மத்திய) தளபதி, 11வது படைப்பிரிவின் தளபதி, மத்திய மாகாணத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் பலரும் இதன்போது கலந்து கொண்டனர்.