கொரிய கடற்படை கப்பல் விஜயத்தின் போது இலங்கை-கொரிய உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் எடுத்துரைத்தார்
ஏப்ரல் 22, 2025கொரியக் குடியரசின் நாசகார கப்பலான ‘காங் காம் சான்’ இன்று (ஏப்ரல் 22) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்தது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேட்கொண்டு இன்று இலங்கைக்கு வந்தடைந்த கப்பலுக்கு கடற்படை சம்பிரதாயபூர்வ வரவேற்பு ஒன்று அளிக்கப்பட்டது.
இன்று காலை நடைபெற்ற இவ்விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) கலந்து சிறப்பித்தார்.
இலங்கைக்கான கொரிய குடியரசின் தூதுவர் அதிமேதகு Miyon Lee யும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
கப்பலின் கட்டளை அதிகாரி மற்றும் கொரிய தூதுவர் ஆகியோருடன் பிரதி அமைச்சர் கப்பலை பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து நடந்த கலந்துரையாடலின் போது, இந்தக் கப்பலின் வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த கூட்டாண்மையில் ஒரு மைல்கல்லாக இருப்பதாகவும் இது கடற்படை ஒத்துழைப்பின் வலிமையை மட்டுமல்ல, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கான இரு நாடுகளின் பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையையும் பிரதிபலிக்கிறது என்றும் தெரிவித்தார்.
இலங்கையில் இளைஞர் மேம்பாட்டிற்கு கொரியாவின் பங்களிப்புகளையும் பிரதி அமைச்சர் எடுத்துரைத்தார். இலங்கையர்களின் தொழில் திறன்கள் மற்றும் மொழிப் புலமையை ஊக்குவிக்க கொரிய குடியரசு ஆற்றிய முக்கிய பங்கை அவர் பாராட்டினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நீண்டகால உறவுகளை பாராட்டிய கோரிய தூதுவர், இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்த நெருக்கமாக பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் கூறினார்.
இந்த நிகழ்வில் முப்படை தளபதிகள், இராஜதந்திரிகள், மற்றும் கொரிய தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.