--> -->

இலங்கையில் விவசாயத்தை மேம்படுத்த இராணுவம் புதிய படைப்பிரிவு ஸ்தாபிப்பு

ஜனவரி 08, 2021

விவசாயம் மற்றும் மிருக வளர்ப்புக்கான படைப்பிரிவு இராணுவத் தலைமையகத்தில் பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவினால் நேற்று (ஜன. 07)  உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டது.

நவீன தொழில்நுட்பம் மற்றும் அறிவைப் பயன்படுத்தி ஒரு முறையான மூலோபாயத் திட்டத்தின் மூலம் நாட்டின் விவசாய உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் விவசாய தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்கான பொறிமுறையைக் கையாள புதிய படைப்பிரிவு விவசாய மற்றும் மிருக வளர்ப்பு பணிப்பகத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டது.

இந்த நோக்கம் ஒரு வளமான நாட்டை உருவாக்கும் ஜனாதிபதியின் 'சுபீட்சத்தின் நோக்கு' தேசிய கொள்கைப் பிரகடனத்துக்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பிரிவு 5 பட்டாலியன்களைக் கொண்டு இயக்கப்படவுள்ளது. அதற்கமைய ஒவ்வொறு பட்டாலியன்களிலும் 28 அதிகாரிகள் மற்றும் 725 படை வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இந்த பட்டாலியன்களும் விவசாயம் மற்றும் மிருக வளர்ப்பு  பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் இந்திரஜித் கடனராச்சியின் மேற்பார்வையின் கீழ் செயல்படவுள்ளது.

இந்த பிரிவின் மூன்று பட்டாலியன்கள் ஏற்கனவே அம்பலங்கொட, கண்டக்காடு மற்றும் நொச்சியாகம ஆகிய பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன, மேலும் இரண்டு பட்டாலியன்கள் விரைவில் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் இராணுவம் நாடு முழுவதும் ஏராளமான பண்ணைகள் மற்றும் விவசாய திட்டங்களை முன்னெடுத்து வருகிறது, மேலும் விவசாய வள மையங்கள், குளிர் சேமிப்பு வசதிகள், உள்நாட்டு மீன்வள வணிகத்தின் வளர்ச்சி மற்றும் முப்படை விவசாயி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஆகியவற்றை  அமைக்க திட்டமிட்டுள்ளது.