தீகவாபி தூபியின் முன்னைய பெருமை விரைவில் யதார்த்தமாகிவிடும் - பாதுகாப்பு செயலாளர்

ஜனவரி 14, 2021
  • நாட்டின் ஐந்தாவது மிக உயர்ந்த தூபத்தின் மீள்நிர்மாணப் பணிகள் தொடர்கிறது
  • வழிபாடுகளுக்காக தீகவாபியின் புனித நினைவுச்சின்னங்களை பிரதிஷ்டை செய்யும் பணிகள் ஆரம்பம்

முன்னர் தொடங்கப்பட்ட பயனற்ற முயற்சிகளைப் போலல்லாமல், இம்முறை தீகவாப்பி  தூபியின் முன்னைய பெருமையை விரைவில் எம்மால் கண்டுகொள்ள முடியும்  என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) நேற்று (ஜன.13) பாதுகாப்பு அமைச்சில் ஊடகங்களிடம் உரையாற்றும் போது உறுதியளித்தார்.

தீகவாப்பி நன்கொடை நிதியத்தை ஆரம்பித்து வைக்கும் வைபவத்தின் போது ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர் "நாம் இந்த மறுசீரமைப்பு பணிகளை மூன்று ஆண்டுகளுக்குள் பூர்த்தி செய்யவுள்ளோம்" என தெரிவித்தார்.

“பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றுக் கொண்டதன் பின்னர் நாம் தீக்கவாப்பி  தூபியின் மீள் நிர்மாணப் பணி திட்டத்திற்கான கணக்கினை ஆரம்பித்தோம். எனினும் இந்த நிதியத்தினை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்டுதலுக்கமைய மகா சங்கத்தினரின் தலைமையில் ஜனவரி 22 ஆம் திகதி கொழும்பு ஸ்ரீ சம்போதி விஹாரையில் இடம்பெறவுள்ளன.

இந்த மறுசீரமைப்பு திட்டத்திற்காக நாளாந்தம் தேவைப்படும்  28000 செங்கற்களை உற்பத்தி செய்து அவற்றை கொண்டு செல்வதே நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் என ஜெனரல் குணரத்ன தெரிவித்தார்.

இந்த மறுசீரமைப்பு பணிகளுக்காக 23 மில்லியன் சுட்ட செங்கற்கள், 3977 க்யூப்ஸ் ஆற்று மணல், 30167 பக்கெட் சீமெந்து மற்றும் பிற மூலப்பொருட்களின் தேவை குறித்து சுட்டிக்காட்டிய அவர், “இந்த வளங்களை வழங்க எங்களுக்கு நிதி உதவி அவசியமாகும்” என தெரிவித்தார்.

எனவே, இந்த செய்தியை பொது மக்களிடம் கொண்டு சேர்க்க அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடக வலையமைப்புக்களின் ஒத்துழைப்பு  கோரப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

புனித கல்-நடைபாதை  (சலபதல மாலுவ), ஒரு முழுமையான புனித யாத்திரைக்கான ஓய்வு இல்லம் (விஸ்ரம சாலாவ) அமைப்பதற்கும் நடைபாதை ஓரங்களில் சல் மற்றும் நாக மரக்கன்றுகளை நடுகை செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அகழ்வாராய்ச்சியின் போது, ​​அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட சர்வவல்லமையுள்ள புனித நினைவுச்சின்னங்கள் தொடர்பாக கடுத்து தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், “இந்த திட்டம் முடிந்ததும் புனித தளத்துடன் தொடர்புடைய அனைத்து நினைவுச்சின்னங்களும் தூபியில் பிரதிஷ்டை செய்யப்படும் என குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறைந்தவுடன் இந்த புனித நினைவுச்சின்னங்களை வழிபடுவதற்கான வசதிகள்  பக்தர்களுக்காக  கொழும்பு மற்றும் ஏனை நகரங்களில் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்  என அவர் குறிப்பிட்டார்.

இந்த மறுசீரமைப்பு பணிகளுக்காக அரச நிதி பயன்படுத்தப்படாது என கூறிய அவர், “இந்த மகத்தான முயற்சிக்கு ஏறக்குறைய ஒரு பில்லியன் ரூபாய் தேவைப்படுகிறது, எனவே பக்தர்கள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்கள் மற்றும்  நலம் விரும்பிகளிடமிருந்து இந்த நிதி திரட்டப்படும்” என குறிப்பிட்டார்.

பக்தர்கள் வழிபடுவதற்கும்  எதிர்கால சந்ததியினருக்கு தாய்நாட்டின் பெருமையைப் எடுத்துரைப்பதற்கும் இந்த புனித தூபியினை மீள கட்டமைத்து, பாதுகாத்து பராமரிப்பது அவசியமாகும் என அவர் தெரிவித்தார்.