பாதுகாப்பு முன்னுரிமைகளுடன் 73வது சுதந்திர தினம் நடைபெறும் – பாதுகாப்புச் செயலாளர்
ஜனவரி 20, 2021- சுகாதார வழிகாட்டலுக்கமைய 73வது சுதந்திர தின கொண்டாட்டம் இடம்பெறும் என பாதுகாப்பு செயலாளர் உறுதி
73ஆவது தேசிய சுதந்திர தின வைபவம் இம்முறையும் சிறந்த முறையில் நடத்த தேவையான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்முறை சுகாதார வழிமுறைகளை முழுமையான முறையில் பின்பற்றிய நிலையில் எவ்வித குறைப்பாடுகளும் இன்றி தேசத்தின் அபிமானத்தை காக்கும் வகையில் வழமை போன்று கம்பீரமான முறையில் நடத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளரும் மற்றும் தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
நாட்டில் தற்பொழுது காணப்படும் கொவிட் நிலைமையை கருத்திற் கொண்டு அழைப்பிதழ்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வருகை தரும் பிரமுகர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அதேபோன்று அணிவகுப்பில் கலந்து கொள்ளும் முப்டைவீரர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த சுதந்திர தின நிகழ்வு மற்றும் மரியாதை அணிவகுப்பு ஆகியவற்றில் கலந்து கொள்ளும் அனைவரும் பீசிஆர் அல்லது என்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் இது தொடர்பில் யாரும் பயப்பட தேவையில்லை எனவும் இதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் ஜெனரல் குணரத்ன குறிப்பிட்டார்.
எதிர்வரும் 73ஆவது சுதந்திர தின விழா ஏற்பாடுகள் தொடர்பில் மீளாய்வு செய்யும் வகையில் சுதந்திர சதுக்கத்தில் இன்றைய தினம் (ஜனவரி, 20) நடைபெற்ற கூட்டத்தின் போது பாதுகாப்பு செயலாளர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
சுதந்திர தின கொண்டாட்டங்களை சுமுகமாக நடத்துவது தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் விரிவாக கலந்துரையாடியதுடன், சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்க முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் அரச அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.
பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுக்கேதென்ன, விமானப்படை தளபதி எயர் மார்ஷல் சுதர்சன பத்திரண, பொலிஸ் மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் திரு. அனுராத விஜேகோன், புத்தசாசன, சமய கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. கே.ஜே. தர்மரத்ன, கொழும்பு மாவட்ட செயலாளர் திரு பிரதீப் யசரத்ன, முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அரசாங்க உத்தியோகத்தர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.