சுதந்திர தின வைபவத்தை சுகாதார வழிமுறைகளுக்கமைய நடத்துவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

பெப்ரவரி 01, 2021
  •     73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மர நடுகை
  •     சர்வ மத ஆசீர்வாதங்களுக்கு முன்னுரிமை
  •     பெப்ரவரி 1 முதல் ஒத்திகைகள் ஆரம்பம்
  •     விஷேட போக்குவரத்து திட்டத்தை செயற்படுத்த ஏற்பாடு

இலங்கையின் 73ஆவது சுதந்திர தின பிரதான வைபவத்தை அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் சுகாதார வழிமுறைகளை முழுமையாக பின்பற்றி சுதந்திர சதுக்கத்தில் நடத்துவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன அமைச்சரும், பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இம்முறை சர்வமத ஆசீர்வாதங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இதன் முதற்கட்டமாக நாளை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பங்குபற்றுதலுடன் சுதந்திர சதுக்கத்தில் பிரித் பாராயண நிகழ்வு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

எதிர்வரும் நான்காம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர தின பிரதான நிகழ்வின் ஏற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விஷேட செய்தியாளர் மாநாட்டில் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவும் கலந்துகொண்டார்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளரும் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்ன (ஒய்வு), சகல அரசாங்க, தனியார் நிறுவனங்களிலும் வீடுகளிலும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஏழாம் திகதி வரையான ஒரு வார காலம் தேசிய கொடிகளை பறக்கவிடுமாறு அனைத்து இலங்கையர்களிடமும் கேட்டுக்கொண்டார்.

நாட்டில் கொரோனா நிலைமை காணப்படுவதனால் சுகாதார வழிமுறைக்கு முக்கியத்துவமளித்து தேசத்தின் அபிமானத்தை காக்கும் வகையில் வழக்கப் போன்று எவ்வித குறைப்பாடுகளுமின்றி கம்பிரமானதாகவும் எளிமையான முறையிலும் சுதந்திர தின வைபவங்கள் நடத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், வைரஸ் பரவவாய்ப்புள்ளதால், சுதந்திர தின அணிவகுப்பை பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவித்த அவர், இதற்கு மாற்றீடாக நிகழ்ச்சியின் அனைத்து நடவடிக்கைகளும் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

இம்முறை சுதந்திர தின நிகழ்வில் மற்றும் மரியாதை அணிவகுப்பில் கலந்து கொள்ளும் அனைவரும் பீசிஆர் அல்லது என்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்த அவர் இது தொடர்பில் எவரும் பயப்பட தேவையில் சுகாதார பாதுகாப்பிற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

இந்த வைபவத்தில் முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவின் உருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்படவுள்ளதாக ஜெனரல் குணரத்ன மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி எண்ணக்கருவிற்கு அமைய நாடளாவிய ரீதியில் மர நடுகை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இது தொடர்பில் மாவட்ட, பிரதேச செயலாளர்களுக்கும் கிராம சேவகர்களுக்கும் அறிவிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இம்முறை சுதந்திர தின பிரதான அணிவகுப்பில் முப்படையினர், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் சுமார் ஐயாயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இவர்களில் இராணுவத்தைச் சேரந்து 3153 பேரும், கடற்படையைச் சேர்ந்த 821 பேரும், விமானப் படையைச் சேர்ந்த 740 பேரும் பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையைச் சேர்ந்த 510 பேரும் சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 457 பேரும் அடங்குவர் என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

சுதந்திர சதுக்கத்தை சுற்றி விசேட போக்குவரத்து திட்டம் ஒன்று ஒத்திகையின் போது மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, இன்று முதல் நிகழ்ச்சி முடியும் வரை அது அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

நிகழ்வு இடம்பெறும் நாளில் காலை 6 மணி முதல் பிற்பகல் 1.00 வரை சில வீதிகள் போக்குவரத்திற்காக முழுமையாக தடை செய்யப்படும் எனவும் அதனுடன் தொடர்புறும் குறுக்கு வீதிகளிலும் இது அமுலில் இருக்கும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ மற்றும் முப்படைகளின் பேச்சாளர்கள் ஆகியோரும் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.