ஓய்வுபெற்ற அனைத்து படை வீரர்களுக்குமான சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது

பெப்ரவரி 03, 2021

ஓய்வுபெற்ற அனைத்து படை வீரர்களின் பெருமை மற்றும் கௌரவம் என்பன அவர்கள் பெருமையுடனும் தொழில் ரீதியான அந்தஸ்துடனும் பிரதிபலிப்பதிலேயே தங்கியுள்ளது என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.

இராணுவத்தின் முன்னாள் உயர் அதிகாரிகள் மற்றும் முப்படைதளபதிகள் இணைந்து ஓய்வுபெற்ற அனைத்து படை வீரர்களுக்கான இந்த பிரத்யேக சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரி கேட்போர் கூடத்தில் இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் அங்கத்தவர்களான ஒய்வு பெற்ற படைவீரர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேசிய முக்கியத்துவம் மற்றும் சேவை சார்ந்த வைபவங்கள், சிவில் ஸ்தாபனங்களால் ஏற்பாடு செய்யப்படும் வைபவங்களின் போது, ஓய்வு பெற்ற சேவை உத்தியோகத்தர்களுக்கான விசேட சீருடையினை அறிமுகப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் ஜெனரல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

தாய் நாட்டிற்காக தமது உயிர்களை தியாகம் செய்த போர் வீரர்களின் அடுத்த நிலையில் உள்ள உறவினர்களுக்கு குறித்த உயிரிழந்த வீரரின் பதக்கங்களை வலது பக்க மார்பில் அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஜெனரல் குணரத்ன, ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ வீரர்கள் அனைவரும் அணிவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட சீருடையை தானும் அணிந்திருந்தமை இந்த நிகழ்வின் சிறப்பம்சமாகும்.

தாய்நாட்டுக்காக உயரிய இராணுவ சேவையை வழங்கியவர்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜெனரல் குணரத்ன, இவ்வாறு சேவையாற்றுவது என்பது ஒரு இலகுவான விடயம் அல்ல, அது பாரிய சவாலானதும் பல கஷ்டங்களை உள்ளடக்கியதுமாகும் என்றார.

இவ்வாறான உயரிய தியாகம் எமது தாய்நாட்டிற்காகவே மேற்கொள்ளப்பட்டது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இருந்தபோதிலும் எம்முன்னே சவால்கள் இன்றும் பல்வேறு கோணங்களில் உள்ளன எனவும் தெரிவித்தார்.

நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் யுத்தத்திற்கு முகம் கொடுத்த முப்படைகளினதும் தளபதிகள் தொடர்பாக நினைவுகூர்ந்த அவர், "நாட்டில் மிலேச்சத்தனமான பயங்கரவாத நடவடிக்கைகள் தோன்றியதில் இருந்து நாங்கள் முன்னணியில் இருந்தோம்" என்று குறிப்பிட்டார்.

"ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை பல தசாப்தங்களாக பயங்கரவாதிகளின் மிலேச்சத்தனமான நடவடிக்கைகள், முழு தொடர்களையும் நாங்கள் கண்கூடாக கண்டுள்ளோம்", என அவர் குறிப்பிட்டார்.

"சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது எங்களது கைகள் கட்டப்பட்டிருந்தது. மீண்டும் யுத்த நிறுத்தத்தின் போது பயங்கரவாதிகளின் தூண்டுதல் நடவடிக்கைகளை நாங்கள் சகித்தோம்.

"போர் நிறுத்த உடன்படிக்கைகளின் போது தொந்தரவுக்கு உள்ளான பின்னர் பயங்கரவாதிகளின் பயங்கரமான தாக்குதல்களை எதிர்கொண்டது நாங்கள் தான்" என தெரிவித்த அவர், "போரினால் பாதிக்கப்பட்ட எல்லைக் கிராமங்களில் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளான அப்பாவி பொதுமக்களை நாங்கள் காப்பாற்றினோம்" எனவும் தெரிவித்தார்.

எங்கள் ஆயுதப்படைகளை வெற்றிகரமான இராணுவமாக மாற்றிய அதேவேளை, இந்த நாட்டு பிரஜைகள் ஒரு சட்டம், ஒரு கொடியின் கீழ் சுதந்திரமாக சுவாசிக்கச் செய்தோதடு நாங்கள் இழந்த எமது நிலத்தை மீளப் பெற்றுக்கொண்டோம் என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

"அங்கவீனமுற்ற போர் வீரர்களுக்கு எவ்வித அனுதாபமும் தேவையில்லை; இருப்பினும் அவர்கள் தகுதிக்குரிய கௌரவமும் பெருமையும் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்" என்று அவர் கூறினார்.

இராணுவம் ஒரு குற்றவியல் அமைப்பு அல்ல என்று மீண்டும் வலியுறுத்திய அவர், "நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவே ஆயுத படைகள் உள்ளன, மேலும் இந்த நோக்கமே இன்னும் நமது இரத்தத்தில் தீவிரமாக உள்ளது" என்றார்.

புதிய சீருடை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் , "ஓய்வு பெற்ற பின்னரும் கூட இதை அணிவது ஒரு பாக்கியம்" எனவும் வெற்றி பெற்ற இராணுவ வீரர்களாக ஒரு சிறப்பான சேவையை முடித்து ஓய்வு பெற்ற பின், நாம் போற்றிய தோழமையுடன் இணைந்திருத்தல் , பதக்கங்களை அணிதல் ஆகியன எம்மனதில் பதியப்படுகிறது" எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின்போது உரை நிகழ்த்திய இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் மேஜர் ஜெனரல் உபுல் பெரேரா (ஓய்வு) , சங்கத்தின் வரவிருக்கும் விரிவாக்கங்கள் மற்றும் முன்னேற்றம் குறித்து பார்வையாளர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

இந்த நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் (ஓய்வு) பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுக்கேதென்னே, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன, முப்படைகளின் முன்னாள் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தினேஷ் நாணயக்காரா, மேற்படி அமைப்பின் செயலாளர் லெப்.கேணல் அஜித் சியம்பலாபிட்டிய (ஓய்வு) உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் மற்றும் அதிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.