நாட்டு மக்கள் என்னிடம் ஒப்படைத்த பொறுப்பை நான் நிறைவேற்றுவேன் - ஜனாதிபதி

பெப்ரவரி 04, 2021

மக்கள் என்னிடம் ஒப்படைத்த பொறுப்பை, அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு உறுதியளித்தார்.

இன்று (பெப்ரவரி, 04) சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற 73 வது சுதந்திர தின நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி ராஜபக்ஷ, சுதந்திரத்தை வென்றெடுக்க பல்வேறு தியாகங்களைச் செய்த சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் மலாயர், பரங்கியர் போன்ற பல்வேறு சமூகங்களையும் சேர்ந்த அனைத்து தலைவர்களையும் இன்றைய தினம் நினைவு கூறுவதாக தெரிவித்தார்.

அதேபோன்று, தேசத்தின் சுதந்திரத்திற்காகவும், இறைமைக்காகவும் தங்கள் உயிர்களை தியாகம் செய்த, பல்வேறு அர்ப்பணிப்புகளைச் செய்த படைவீரர்களையும் நான் நன்றியுடன் நினைவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து, ஒரு தேசமாக நாம் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்திருக்கின்றோம். மத மற்றும் இன அடிப்படையிலான மோதல்கள், இனவாத மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள், தேவையற்ற வெளிநாட்டு அழுத்தங்கள் மற்றும் அரசியலமைப்பு நெருக்கடிகள் போன்ற பல பிரச்சினைகளை அவ்வப்போது எதிர்கொண்டோம் என அவர் குறிப்பிட்டார்.

நான் ஒரு சிங்கள பௌத்தன் என்ற வகையில் பௌத்த போதனைகளின்படியே நான் இந்த நாட்டை நிர்வகிக்கிறேன். அனைத்து சமயங்களுக்கும் அனைத்து இனங்களுக்கும் உரிய கௌரவத்தை அளிக்கும் அஹிம்சையும் அமைதியும் கொண்ட பௌத்த தத்துவத்தில், எமது நாட்டில் உள்ள அனைத்து மதங்களுக்கும் அனைத்து இனங்களுக்கும் நாட்டில் நடைமுறையில் உள்ள சட்ட கட்டமைப்பிற்குள் சரி சமமாக சுதந்திரத்தை அனுபவிக்கும் உரிமை உண்டு.

தவறான பிரச்சாரத்தின் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்துபவர்கள் தொடர்பக கருத்து வெளியிட்ட அவர், இந்த நாட்டு மக்கள் எப்போதும் விவேகத்துடன் இருக்க வேண்டும் என தான் கேட்டுக்கொள்வதாகவும் தரவுகளின் அடிப்படையில் விடயங்களை ஆராய்ந்து உண்மைகளை அறிந்து முடிவுகள் எடுக்கப்பட்டால் எவருக்கும் பொதுமக்களை தவறாக வழிநடத்த முடியாது எனவும் குறிப்பிட்டார்.

இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இந்த நாட்டில் வாழும் அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை உண்டு. இன அல்லது மத அடிப்படையில் குடிமக்களைப் பிரிப்பதற்கான முயற்சிகளை நாங்கள் நிராகரிக்கிறோம் என வலியுறுதிய அவர், அனைத்து குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன், ஒரே சட்டம் என்ற கொள்கையே எமது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எப்போதும் தமது நிலைப்பாடு என குறிப்பிட்டார்.

அதிகார எல்லைகளுக்குள் முடிவெடுப்பதற்கான முக்கியத்துவத்தை தெரிவித்த அவர், எங்கள் நாட்டின் மக்களையும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகங்களை பாதிக்கும் காலாவதியான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை மாற்றவும் புதுப்பிக்கவும் நான் இப்போது ஒரு விசேட ஜனாதிபதி செயலணியை அமைத்துள்ளதாக தெரிவித்தார்.

கிராமத்துடன் உரையாடல்" திட்டத்தில் நான் தனிப்பட்ட முறையில் செயற்திறமாக பங்கேற்கிறேன், ஏனெனில் கிராமப்புற அபிவிருத்தி அரசாங்கத்தின் முதன்மை முன்னுரிமையாகும் என அவர் தெரிவித்தார்.

ஊழல் மற்றும் வீண்விரயங்களை ஒழிக்க நாடு முழுவதும் ஒரு சமூக கருத்தை உருவாக்குவதில் என்னுடன் இணையுமாறு உங்களை அழைக்கிறேன். எமது எதிர்கால சந்ததியினருக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் தனது உரையின் போது கேட்டுக்கொண்டார்.

என்னை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்கு கடுமையாக உழைத்ததாக பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர். அது உண்மையாக இருக்கலாம். சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் எனக்கு ஆதரவு அளித்தனர். பெரும்பான்மையான மக்கள் அவர்களது தனிப்பட்ட இலாபத்திற்காக அன்றி, என்னிடமிருந்து நாட்டிற்கான சேவையை எதிர்பார்த்தே அவ்வாறு செய்தார்கள் என்று நான் நம்புகிறேன் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இத்தகைய நேர்மையான நோக்கங்களுடன் என்னை ஆதரித்த மக்களின் பொதுவான அபிலாஷைகளை நிறைவேற்ற நான் எப்போதும் செயற்படுவேன். ஆனால் தனிப்பட்ட அல்லது வர்த்தக நலன்களை நிறைவேற்றுவதற்கான குறுகிய நோக்கத்துடன் என்னை ஆதரித்தவர்களை மகிழ்விப்பதற்காக நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் முடிவுகளை எடுக்க நான் ஒருபோதும் தயாராக இல்லை எனவும் அவர் தெரிவித்தார்..