அம்பாறையில் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கடற்படையினரால் ஸ்தாபிப்பு
பெப்ரவரி 06, 2021இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் சமூக நல திட்டங்களின் ஒரு பகுதியாக அம்பாரை, பதியத்தலாவை பிரதேச செயலக பிரிவில் நான்கு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கடற்படையினரால் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் குறித்த பகுதியில் சுத்தமான குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுவதன் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நன்மையடையவுள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயை தடுக்கும் தேசியத் செயற்திட்டத்திற்கமைய, சுகாதார அமைச்சின் நிதியுதவியின் கீழ் கடற்படையினரால் நாட்டில் 817 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவுவதற்கான தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் அதனை நிறுவுவதற்கான ஆளனி வசதிகள் என்பன வழங்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, இந்த புதிய நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பபதியதலாவ பிரதேச செயலகம், கொல்லேகம ரஜா மகா விஹாரை, செரங்கட புராண ரஜ மஹா விஹாரை மற்றும் மீகஸ்வத்தாவில் உள்ள சிறுவர் பூங்கா ஆகிய அலுவலக வளாகங்களில் நிறுவப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் தட்டுப்பாடு நிலவும் பிரதேசங்களில் இவ்வகை குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்கள் நலனுக்காக நிறுவப்பட்டதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை தென்கிழக்கு கடற்படை கட்டளையகத்தின் கெப்டன் நிலை லொஜிஸ்டிக் திணைக்கள கெப்டன் பிரஷன் மார்சோ பிரதம அதிதியாக கலந்துகொண்டு மக்கள் பாவனைக்காக திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் கடற்படை வீரர்கள் மற்றும் உள்ளூர் வாசிகள் கலந்து கொண்டனர்.
குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு, சுகாதார வழி முறைகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டது.