--> -->

நாட்டில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 69,410 ஆக அதிகரிப்பு

பெப்ரவரி 16, 2021


இன்று பெப்ரவரி 16ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 774 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 76,427 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த 208 பேரும், கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 179 பேரும், இரத்னபுரி  மாவட்டத்தைச் சேர்ந்த 82 பேரும், ஏனைய மாவட்டங்களை சேர்ந்த 305 பேரும் அடங்குவதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் வைரஸ் தோற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 72,906 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, 68,017 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

நாட்டில் 15,430  பீசீஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் மேற்கொள்ளபட்டதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 715பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 69,410 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 6,614 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் படையினரால் மேற்பார்வை செய்யப்படும் 92 தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார் 9,152  பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் உயிரிழந்ததை அடுத்து வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 403 ஆக உயர்வடைந்துள்ளது.