--> -->

கடற்படையின் "கஜபாகு" கப்பல் "அமான் - 2021" சர்வதேச கடற்படை கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பு

பெப்ரவரி 18, 2021

பாகிஸ்தானின் கராச்சியில் இடம்பெற்ற "அமான்  2021" சர்வதேச  கடற்படை கூட்டுப் பயிற்சியில் இலங்கை கடற்படையின் "கஜபாகு" கப்பல் பங்கேற்றது. இம்மாதம் 12ம் திகதி இடம்பெற்ற இந்த கூட்டுப்பயிற்சியில் கலந்து கொண்ட 45 நாடுகளின் கப்பல்களில் இலங்கை கடற்படையின் "கஜபாகு" கப்பலும்  ஒன்றாகும்.

நடைபெற்று முடிந்த  இந்த கூட்டுப் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக  இலங்கை கடற்படையின் சார்பில் கஜபாகு கப்பல்  கடந்த 05ம் திகதி பாகிஸ்தானை நோக்கி பயனமனது.

"சமாதானத்திற்கான ஒன்றிணைவு"  எனும் தொனிப்பொருளில் பாகிஸ்தான் கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட "அமான்  2021" சர்வதேச  கடற்படை கூட்டுப்பயிற்சி, இம்மாதம 12ம் திகதி  முதல் 16ம் திகதி  வரை நடைபெற்றதாக கடற்படை தெரிவித்துள்ளது.

பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தவும், ஒருங்கிணைப்பு மற்றும் பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்படுத்துவதற்காக 2007ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பமான  "அமான்" கடற்படை கூட்டுப் பயிற்சிகளின் வரிசையில் இது 7 தொடர் ஆகும்.

"அமான்  2021" சர்வதேச  கடற்படை கூட்டுப்பயிற்சியில் , துறைமுக சார்ந்த பயிற்சிகள்   பெப்ரவரி 12 முதல் 14  வரை கராச்சி துறைமுகத்தில் நடைபெற்றது. கடல் சார்  ஒத்திகை பயிற்சிகள்,  வட அரபிக் கடலில் பெப்ரவரி 15  மற்றும்  16  திகதிகளில் இடம்பெற்றது. கடல் பாதுகாப்பு நடவடிக்கைகள், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் மனிதாபிமான உதவி நடவடிக்கை ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் "அமான்  2021" சர்வதேச  கடற்படை கூட்டுப்பயிற்சி நடைபெற்றதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த பயிற்சியின் போது, "பாதுகாப்பான மற்றும் நிலையான சுற்றுச்சூழல்: மேற்கு இந்து சமுத்திர பிராந்தியத்திற்கான பகிரப்பட்ட எதிர்காலம்" என்ற தலைப்பில் பாகிஸ்தான் கடற்படையின் தலைமையில் சர்வதேச கடல் மாநாடு பெப்ரவரி 13ம் திகதி  முதல் 15ம் திகதி வரை நடைபெற்றது.
கொவிட்-19 உலகளாவிய தொற்று நோய்க்கு முகம்கொடுக்கும் வகையில்  கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் கடைபிடிக்கப்பட்டு இந்த பயிற்சிகள் நடைபெற்றது.