--> -->

விமானப்படையின் 70வது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

பெப்ரவரி 19, 2021


விமானப்படையின் 70வது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்திற்காக வடிவமைக்கப்பட்ட உத்தியோகபூர்வ இலட்சினையை திறந்து வைத்த விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன, இலங்கை விமானப்படை தனது கீர்த்திமிகு 70வது ஆண்டு நிறைவினை மார்ச், 2ம் திகதி கொண்டாடவுள்ளதாக தெரிவித்தார்.

விமானப்படையின் 70வது ஆண்டு நிறைவு கொண்டாட்ட நிகழ்வுகள் களனி ரஜ மஹா விகாரையில் மார்ச் முதலாம் திகதி “பிச்ச மல் பூஜா” மத அனுஷ்டானங்களுடன் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை விமானப் படையின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மார்ச் மாதம் 02ஆம் திகதி கட்டுநாயக்க விமானப் படைத் தளத்தில் பிரதான மரியாதை அணிவகுப்பை தொடர்ந்து கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

விமானப் படையின் ஆண்டு நிறைவினை முன்னிட்டு கொழும்பு,கட்டுநாயக்க உட்பட நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து விமானப் படை முகாம்களிலும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பிரதான நிகழ்வினை தொடர்ந்து, விமானப்படையின் இந்த வரலாற்று நிகழ்வினை குறிக்கும் வகையில் முத்திரை மற்றும் முதல் நாள் தபாளுரையும் வெளியிட்டுவைக்கப்படவுள்ளது.

மேலும், நாட்டுக்கு ஆற்றிய சேவைகளை அங்கீகரிக்கும் வகையில், மார்ச் 05ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விமானப் படையின் ஜெட் மற்றும் எம் ஐ –17ரக ஹெலிகொப்டர் பிரிவுகளுக்கு ஜனாதிபதி வர்ணங்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, 22வது தடவையாக இடம்பெறம் விமானப்படை வருடாந்த சைக்கிள் ஓட்டப் போட்டி -2021 தொடர், மார்ச் 07ம் திகதி நடைபெறவுள்ளவுள்ளதுடன் விமானப்படை தளபதி ரக்பி கிண்ண போட்டிகள் மார்ச் 20-21 மற்றும் 26-27 திகதிகளில் இடம்பெறவுள்ளதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.