தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தினால் மறைந்த அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோவின் நினைவு சொற்பொழிவு நிகழ்வு ஏற்பாடு

பெப்ரவரி 20, 2021

தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தினால் 'தேசத்தின் கடல் வள சக்தியும் அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோவும் ’எனும் தலைப்பில் 4 வது ‘வருடாந்த நினைவு தின சொற்பொழிவு ’ ஏற்பாடு செய்யப்பட்டது. மறைந்த அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோவை நினைவு கூறும் வகையிலும் மேற்படி நினைவு சொற்பொழிவு தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தினால் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாதுகாப்புச் செயலாளரும் தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த வருடாந்த நிகழ்வில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் திசர சமரசிங்க (ஓய்வு) வினால் நினைவு தின சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.

இந்த நிகழ்வில் உரை நிகழ்த்திய பாதுகாப்புச் செயலாளர், புலிகள் தோற்கடிக்கப்பட்டமையானது, தாய் நாட்டுக்காக உயிர் நீத்த மற்றும் உயிருள்ள போர்வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் இறுதி தியாகத்தின் விளைவாகும் என்ற உண்மையை நாம் அனைவரும் இந்த பெருமைமிக்க தேசத்தின் குடிமக்கள் என்ற வகையில் முழு மனதுடன் நினைவில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

அட்மிரல் க்ளான்சி பெர்ணாண்டோவினால் தேசத்திற்கு அளிக்கப்பட்ட உன்னத சேவையை நினைவுகூர்ந்த பாதுகாப்புச் செயலாளர், ஒபரேஷன் 'பலவேகய' எனும் படை நடவடிக்கையில் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவவுடன் சேர்ந்து வெற்றிலைக்கேணி பிரதேசத்தில் படையினரைத் தரையிறக்கும் நோக்கத்துடன் கடற் படையினரால் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கையில் அவரது அர்ப்பணிப்பு மிகுந்த செயற்பாட்டினை அவர் இதன் போது நினைவு கூர்ந்தார்.

1992ம் ஆண்டு அட்மிரல் க்ளான்சி விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டதையடுத்து இலங்கை இராணுவ வரலாற்றில் கடமையில் இருக்கும் போது உயிரிழந்த சிரேஷ்ட அதிகாரி ஒருவரின் பேரிழப்பை இந்த தேசம் தாங்க வேண்டியிருந்தது என அவர் தெரிவித்தார்.

வரலாற்று காலம் முதல் தற்போது வரை நமது போர் வீரர்களின் தேசபக்தியானது சமாதானத்தையும் ஒற்றுமையையும் பெற்றுகொள்ள இலங்கை பிரஜைகளுக்கு வழிவகுத்தது என தெரிவித்த அவர், நாட்டின் எதிர்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு அட்மிரல் க்ளான்சி பெர்னாண்டோ மற்றும் அவர் போன்று செயற்பட்ட ஏனைய வீரர்களின் தன்நலமற்ற செயல்களைப் பற்றி ஞாபகப்படுத்துதல் மற்றும் கௌரவிப்பதானது நாட்டின் அத்தகைய தியாகிகளுக்கு நாம் வழங்கக்கூடிய ஒரு உன்னத காணிக்கையாகும் என தெரிவித்தார்.

மறைந்த அட்மிரல் க்ளான்சி பெர்னாண்டோவுடன் தான் பணியாற்றிய காலப்பகுதியை நினைவு கூர்ந்த நினைவுப் பேருரையாளர், அவரிடம் உயர்ந்த தலைமைத்துவ குணங்கள் காணப்பட்டதாக தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தினால் வருடாந்தம் இதுபோன்ற நினைவுப் பேருரை 2017ஆம் ஆண்டு முதல் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. இதற்கமைய 2017ம் ஆண்டு மறைந்த லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவவின் நினைவுப் பேருரை நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2018ம் ஆண்டில் மேஜர் ஜெனரல் விஜய விமலரத்னவின் நினைவுப் பேருரையும் 2019 ஆம் ஆண்டில் மறைந்த கேர்ணல் ஏஎப் லாபிரின் நினைவுப் பேருரையும் நிகழ்த்தப்பட்டது.

நேற்றைய நினைவு பேருரை புதிய தலைமுறையினருக்கு நாட்டில் இருந்த பெரிய இராணுவ மூலோபாயவாதிகள் / போர் வீரர் ஒருவர் பற்றி அறிய மற்றும் படிப்பதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்திருந்தது.

நினைவுப் பேருரை ஆரம்ப நிகழ்வில் தாய் நாட்டிற்காக உயிர் நீர்த்த போர் வீரர்களை நினைவுகூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியதன் பின்னர் நிகழ்வின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சின் செயலாளரும் தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமுமான அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே (ஓய்வு) வினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

இந்த நிகழ்வில் திருமதி மோனிகா பெர்னாண்டோவினால் அட்மிரல் க்ளான்சி பெர்னாண்டோவின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

நினைவுப் பேருரை ஆற்றிய அட்மிரல் சமரசிங்கவிற்கு பிரதம அதிதி ஜெனரல் குணரத்னவினால் நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டது.

நினைவுப் பேருரையின் இறுதி நிகழ்வாக மறைந்த அட்மிரல் க்ளான்சி பெர்னாண்டோவின் மகன் நிசான் பெர்னாண்டோவினால் நன்றி உரை நிகழ்த்தப்பட்டது.

இந்த நிகழ்வில் அட்மிரல் க்ளான்சி பெர்னாண்டோவின் குடும்ப உறுப்பினர்கள், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர (ஓய்வு), கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, முன்னாள் கடற்படை தளபதிகள், சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர், மேலதிக செயலாளர் (தேசிய பாதுகாப்பு) தேசிய பாதுகாப்பு கல்லூரி மற்றும் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரிகளின் கட்டளைத் தளபதிகள், விசேட அதிரடிப்படை கட்டளைத் தளபதி, வெளிநாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் அதிதிகள் மற்றும் தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.