'மிஹிந்து செத் மெதுர' வில் உள்ள போர் வீரர்களுக்கு இராப்போசன நிகழ்வு

பெப்ரவரி 21, 2021

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு (SVU) தலைவி சித்தராணி குணரத்ன தலைமையில் நேற்று மாலை அத்திட்டிய 'மிஹிந்து செத் மெதுர' வில் உள்ள அங்கவீனமுற்ற போர் வீரர்களுக்கான இராப்போசன நிகழ்வு ஒன்று ஏற்பாடுசெய்யப்பட்டது.

'மிஹிந்து செத் மெதுர', போரின் போது அங்கவீனமுற்ற போர் வீரர்களை பராமரிக்கும் ஒரு இல்லமாகும். மேலும், நடமாட முடியாத நிலையில் தொடர்ந்து பராமரிப்பு, கவனம் மற்றும் உதவி தேவைப்படும் அங்கவீனமுற்ற வீரர்களுக்கான இல்லம் ஆகும்.

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி, பாதுகாப்பு செயலாளரும் தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, முப்படைதளபதிகள், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், முப்படைகளின் சேவா வனிதா பிரிவின் தலைவிகள் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள சேவா வனிதா பிரிவின் தலைவி ஆகியோர் இணைந்து தமது எஞ்சிய வாழ்நாள் முழுவதியும் படுக்கையில் கழிக்கும் போர் வீரர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கினர்.

இந்த கூட்டத்தில், பாதுகாப்பு உயர் அதிகாரிகள், இல்லத்தில் வசிக்கும் அங்கவீனமுற்ற போர் வீரர்களுடன் இணைந்து, அவர்களின் நலன் குறித்து கேட்டறிந்து கொண்டனர்.

பின்னர், வண்ணமயமான மாலை நிகழ்ச்சிகளின் போது இலங்கை விமானப்படையின் கலாச்சார குழுவினரால் 'பூஜா நடனம்' ஒன்று அளிக்கப்பட்டது.

அண்மையில் காதலர் தினத்தைக் குறிக்கும் வகையில், பெண் நடனக் கலைஞர்கள் மூலம் அங்கவீனமுற்ற போர் வீரர்களுக்கு ரோஜா பூக்கள் வழங்கப்பட்டது.

ஜெனரல் கமல் குணரத்னவினால் இயற்றப்பட்டு பிரபல பாடகிகளான சஷிகா நிசன்சலா மற்றும் உமாரியா சின்ஹவன்ச ஆகியோர் பாடிய ஜனரஞ்சக பாடலான ' தரு துக', 'யுத கினி துமரய' ஆகிய பாடல்களும் இதன்போது இசைக்கப்பட்டன.

இலங்கையின் பிரபல பொப் இசைக்குழுவான பாடகர் ரொஷான் பெர்னாண்டோ தலைமையிலான 'ஃப்ளாஷ்பேக்' இசைக்குழுவின் பாடல்கள் இந்த இன்னிசை மாலையை அலங்கரித்தன. பிரபல பாடகர் நளின் பெரேராவும் இந்த இசை நிகழ்ச்சியில் இணைந்து கொண்டார்.

இதன்போது, யுத்த முன்னாள் இராணுவ வீரர்களுக்கு பரிசுப்பொதிகள் வழங்கப்பட்டன. மேலும் ஜெனரல் கமல் குணரத்னவின் பல வெளியீடுகளும் மிஹிந்த செத் மெதுர நூலகத்திற்கு வழங்கப்பட்டன.

மேலும், யுத்த வீரர்களை மகிழ்வித்த கலைஞர்களுக்கும், இசைக்குழுவுக்கும் சேவா வனிதா பிரிவின் தலைவியினால் நினைவுப் பரிசு வழங்கி வைக்கப்பட்டது.

தெற்காசியாவில் நிர்மாணிக்கப்பட்ட இத்தகைய வசதிகளுள்ள முதலாவது மிஹிந்த செத் மெதுர, அப்போது பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி செயலாளராக இருந்த தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கு அமைய ஸ்தாபிக்கப்பட்டது.

நேற்றைய இசை விருந்தில் கலந்து கொண்ட அனைவருக்கும், போர் வீரர்களுக்கும் இந்த மாலைப்பொழுது மறக்க முடியாத மாலைபொழுதாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்கள், இராணுவ இணைப்பு அதிகாரி, சேவா வனிதா பிரிவு உறுப்பினர்கள், மிஹிந்த செத் மெதுர அதிகாரிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.