உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கான நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை
ஜூலை 05, 2019உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலினால் செயலிழந்துள்ள சுற்றுலாத்துறை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட துறைகளின் வர்த்தகர்களுக்கான நிவாரணமளிக்கும் நடவடிக்கையை முறையாகவும் வினைத்திறனாகவும் மேற்கொண்டு குறித்த வர்த்தக சமூகத்தினரை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகுமென ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகளுடன் இன்று (04) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைக் குறிப்பிட்டார்.
சுற்றுலாத்துறை அமைச்சு, நிதி அமைச்சு, வர்த்தக அமைச்சு உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர்களும் இக்கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்ததுடன், வர்த்தக சமூகத்தினர் எதிர்நோக்கியுள்ள அசௌகரியங்கள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
சுற்றுலாத்துறையை பாதிக்கும் காரணிகள், வரிகள் காரணமாக எதிர்நோக்கியுள்ள சிரமங்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களின் நடத்தைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதி அவர்களிடம் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த வர்த்தகர்களுக்கு நிவாரணமளிப்பதற்காக அமைச்சரவை உப குழுவொன்றினை ஸ்தாபித்து நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கியினூடாக உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அதன் கீழ் மட்டத்திலுள்ள நிறுவனங்களால் குறித்த அறிவுறுத்தல்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படாமையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள், குறித்த அமைச்சரவை உப குழுவிற்கும் அமைச்சரவையிலும் கலந்துரையாடி தேவையான நிவாரண வேலைத்திட்டங்களை ஒழுங்குபடுத்துவதாக தெரிவித்தார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க, நிதி அமைச்சு, வர்த்தக அமைச்சு, மத்திய வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தக சம்மேளனத்தின் முப்பது சங்கங்களின் பிரதிநிதிகளும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
நன்றி: pmdnews.lk