மிஹிந்து மகா தூபியின் முன்னைய மகிமை விரைவில் புலப்படும் - பாதுகாப்பு செயலாளர்

மார்ச் 06, 2021
  • இந்த ஆண்டு இறுதிக்குள் சந்தஹிரு சேய பக்தர்களின் வழிபாட்டுக்கு

நாட்டின் பழமை வாய்ந்த தூபிகளில் ஒன்றான மிஹிந்து மகா சேயவின் மறுசீரமைப்பு பணிகள் இவ்வாண்டு ஒக்டோபர் மாதத்திற்குள் நிறைவு பெற்றதும் பக்தர்களின் வழிபாடுகளுக்காக வழங்க முடியும் என்று பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) இன்று (மார்ச், 06) தெரிவித்தார்.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் அண்மையில் இடம்பெற்ற ‘மிஹிந்து மகா தூபி’ மறுசீரமைப்பு பணியின் அங்குரார்ப்பன நிகழ்வினை  நினைவு கூர்ந்த அவர், இந்த மறுசீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.

அனுராதபுரத்தில் உள்ள புனித வரலாற்று தலங்களில் ஒன்றான மிஹிந்து மகா சேயவுக்கு இன்றைய தினம் விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர், அங்கு வழிபாடுகளில் ஈடுபட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒக்டோபர் மாதத்தில் நிகழும் அரஹந்த மஹிந்த தேரரின் நினைவு தினமான மிஹிந்து புர அடவக்க பௌர்ணமி தினத்திற்குள் குறித்த மறுசீரமைப்பு பணிகள் நிறைவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.

உயர்மட்ட அரச அதிகாரிகள் மேற்கொண்ட புனித தளத்திற்கான இந்த விஜயத்தில் மிஹிந்தலே ரஜ மகா விஹாரையின் பிரதம விஹாராதிபதிவண. வலவாஹெங்குனவெவ தர்மரத்ன தேரரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, தாய் நாட்டின் விடுதலைக்காக விலைமதிப்பற்ற தியாகங்கள் செய்த போர்வீரர்களின் ஞாபகார்த்தமாக 2010ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய நிர்மாணிக்கப்பட்டுவரும் ‘சந்தஹிரு சேயவின் நிர்மாணப்பணிகள் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் அதன் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்காக வழங்கப்பட உள்ளது என்றார்.

‘சந்தஹிரு சேயவின் தற்போதைய நிலைமைகள், அதன் நிர்மாணப் பணிகளுக்காக கொடுக்கப்பட்ட காலக்கெடு என்பன தொடர்பாகவும் சேயவில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு சிறப்பம்சங்கள் தொடர்பாகவும் நிர்மாணப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுடன் இந்த விஜயத்தின் போது கலந்துரையாடினார்.

இந்த இரண்டு வழிபாட்டு தளங்கள் தவிர்ந்த அம்பாறை மாவட்டத்தில் உள்ள தொல்பொருள் தளமான தீகவாபி தூபி தொடர்பாகவும் கருத்து தெரிவித்த அவர், அதன் மறுசீரமைப்பு பணிகளை நிறைவு செய்வதற்கு மூன்று வருட கால அவகாசம் தேவைப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்வில் மஹாமேஹவன சங்க சபையின் செயலாளரும் ஷர்த்தா  ஊடக வலையமைப்பின் பிரதம ஆலோசகருமான வண. அலுதெனிய சுபோதே தேரர், வண. பொல்பித்திமுக்கலானே பஞ்ஞானசிறி தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர, தொல்பொருள் திணைக்களதின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க, வன்னி பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார, இராணுவத்தின் 21ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, வடமத்திய கடற்படை பிராந்திய கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சஞ்ஜீவ டயஸ், பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தினேஷ் நாணயக்கார, செயற்திட்ட அதிகாரிகள், கட்டட கலைஞர்கள், புரவலர்கள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.