--> -->

கல்வியின் ஊடாக இராணுவ - சிவில் உறவுகளை ஊக்குவிப்பதன் மூலம் ஒரு நாடு பின்னடைவதை தவிர்க்க முடியும் - பாதுகாப்பு செயலாளர்

மார்ச் 10, 2021
  • கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் உள்கட்டமைப்பு அபிவிருத்தி
  • கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 40வது ஆண்டு நிறைவு தின உத்தியோகபூர்வ இலச்சினை வெளியீடு

மனித கௌரவம், ஒருமைப்பாடு, ஜனநாயக பிரசன்னம், நிலையான வளர்ச்சி, பொருளாதார சமத்துவம், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் சமத்துவ வாய்ப்பு போன்றன பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தியின் முக்கிய பெறுமதிகளை பல்கலைக்கழக கல்வியினூடாக வளர்க்க முடியும் என்பதை நாம் எப்போதும் நம் மனதில் கொள்ள வேண்டும் என்று பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
 
சிவில் இராணுவ உறவுகளின் வெளிப்பாடு மற்றும் மேலே குறிப்பிடப்பட்ட முக்கிய பெறுமானங்களை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதில் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வகிபாகம் தொடர்பாக குறிப்பிட்ட அவர், கல்வியின் மூலம் சிவில் இராணுவ உறவுகளை ஊக்குவிப்பதனூடாக ஒரு நாடு தனது நிலைகளை உயர்த்தி தேசிய வளர்ச்சியின் இலக்குகளை அடைந்து கொள்ள முடியும் என தெரிவித்தார்.
 
இரத்மலானையில் உள்ள கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்பு செயலாளர், அங்கு விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய போதே இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
 
கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் ஒரு நிறுவனமாகும்.
 
கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக வளாகத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்பு செயலாளருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதுடன், பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் பாதுகாப்பு செயலாளரை வரவேற்றார்.
 
மேலும், கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 40வது ஆண்டு நிறைவு தின உத்தியோகபூர்வ இலச்சினை வைபவ ரீதியாக பாதுகாப்புச் செயலாளரினால் வெளியீட்டு வைக்கப்பட்டது
 
கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம் குறுகிய காலத்திற்குள் அதன் முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளை மேற்படி பல்கலைக்கழக முகாமைத்துவ சபையின் தலைவர் என்ற வகையில பாதுகாப்புச் செயலாளர் பாராட்டியதுடன், நாட்டிலும் பிராந்தியத்திலும் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இருப்பதன் முக்கியத்துவத்தை மேலும் விளக்கினார்.
 
மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் எதிர்கால தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் பாதுகாப்பு செயலாளருக்கு விளக்கமளித்தனர்.
 
அணிவகுப்பு சதுக்க பார்வையாளர் பகுதி (பெவிலியன்), அனைத்து வசதிகளுடன் கூடிய ஆய்வுகூட கட்டிடம், புதிய மரைன் என்ஜின் சிமுலேட்டர் மற்றும் புத்தாக்க ஆய்வு கூடம், விளையாட்டு பார்வையாளர் கட்டிடத் தொகுதி, படைவீரர்களுக்கான ஓய்வு நேர தங்குமிட வசதிகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கிளப் ஹவுஸ் ஆகியவை பாதுகாப்புச் செயலாளரினால் திறந்து வைக்கப்பட்டது.
 
இந்த விஜயத்தின் போது புதிதாக திறந்து வைக்கப்பட்ட ஆய்வுக்கூடங்களில் வைக்கப்பட்டுள்ள உபகரணங்கள் தொடர்பாக பாதுகாப்பு செயலாளருக்கு அந்தந்த கல்வி பீட மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களினால் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
 
கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தனித்துவமான அடையாளமாக கருதப்படும் அதன் பிரதான கேட்போர் கூட தொகுதியின் நிர்மாணப் பணிகளை ஆய்வு செய்த பாதுகாப்பு செயலாளர் நிர்மாணப் பணிகளை குறித்த காலப்பகுதிக்குள் நிறைவு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
 
“நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதில் மகத்தான பங்களிப்பைச் செய்த சிறந்த ஆளுமைமிக்க அதிகாரிகளை உருவாக்கிய கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பெருமை, முப்படை சேவைகளுக்கு முன்மாதிரியான அதிகாரிகளை உருவாக்கியமை அதன் கற்பித்தல் தரத்திற்கு சான்றாக அமைவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 
பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய முப்படையினருக்கு ஜெனரல் குணரத்ன தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
 
மேலும் இந்த விஜயத்தினை நினைவு கூறும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் உபவேந்தர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
 
இந்த நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (பாதுகாப்பு) பி பி எஸ் சி நோனிஸ், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக தெற்கு வளாகத்தின் ரெக்டர் பிரிகேடியர் பிரசாத் எதிரிசிங்க, பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், பல்கலைக்கழக பதிவாளர், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், கல்வி மற்றும் கல்விசார ஊழியர்கள், மற்றும் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.