சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் மேற்கொண்ட முயற்சி கடற்படையினரால் முறியடிப்பு
மார்ச் 12, 2021நேற்று (மார்ச், 11) கற்பிட்டி, குரக்கன்ஹேன பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
குரக்கன்ஹேன பகுதியில் கற்பிட்டி குளம் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான லொறியொன்றினை அவதானித்த வடமேற்கு கடற்படை கட்டளையக வீரர்கள் சந்தேக நபர்களையும் லொறியின் சாரதியையும் கைது செய்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்கள் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக வெளிநாட்டிற்கு குடிபெயர்வதற்காக படகு ஒன்றிற்காக காத்திருந்ததாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் எனவும், அவர்களில் இரண்டு சிறுமிகள், ஒரு சிறுவன் மற்றும் மற்றொரு பெண் ஒருவரும் அடங்குகின்றனர்.
கைப்பற்றப்பட்ட லொறியுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.