‘சந்தஹிரு சேய’ தூபியில் பெறுமதிவாய்ந்த புதையல் பொருட்களை வைப்பு செய்யும் மகோட்ஷவம்

மார்ச் 16, 2021
  • புதையல் பொருட்களை அன்பளிப்புச் செய்ய பொதுமக்களுக்கு சந்தர்ப்பம்
  • அலங்கரிக்கப்பட்ட சூடா மாணிக்கம் நாடு முழுவதும் கொண்டு செல்லப்படவுள்ளது
  • நிர்மாணப் பணிகள் நவம்பர் மாதம் பூர்த்தி: பக்தர்களின் வழிபாட்டுக்காக திறந்து வைப்பு

நாட்டின் நான்காவது பெரிய தாதுகோபுரமான சந்தஹிரு சேய தூபியின் நாற்சதுரத்தில் புதையல் பொருட்களை வைப்பு செய்யும் மகோட்சவம் எதிர்வரும் 28 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.

இதற்கான பெறுமதி வாய்ந்த புதையல் பொருட்களை எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 27ஆம் திகதிவரை வழங்க பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சந்தஹிரு சேய தூபியின் நாற்சதுரத்தில் புதையல் பொருட்களை வைப்புச் செய்யும் மகோட்ஷவம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (16) காலை இடம்பெற்றது.

பாதுகாப்புச் செயலாளர் இங்கு மேலும் விளக்கமளிக்கையில் :

தாய் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த போர் வீரர்களின் தியாகங்களை நினைவு கூறும் வகையில் அனுராதபுரத்தில் உள்ள பௌத்த புனித பூமி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்தத் தாது கோபுரத்தில் நாற்சதுர அறைக்குள் பெறுமதியான புதையல் பொருட்களை வைப்பு செய்வதற்காக பொதுமக்களும் விசேடமாக உயிர்த் தியாகம் செய்த படைவீரர்களின் பெற்றோர் மற்றும் மனைவி மற்றும் பிள்ளைகளும் தங்களது மகன், கணவன் மற்றும் தந்தை சார்பாக வைப்பு செய்வதற்காக பொன், மாணிக்கம், மரகதம் மற்றும் வைரம் ஆகிய பெறுமதி வாய்ந்த பொருட்களை இதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவினரிடம் வழங்கி வைக்க முடியும் என பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டார்.

மூன்று தசாப்தங்களாக நீடித்த மிலேச்சத்தனமான பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக இல்லாதொழிக்க முப்படை, பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர்களின் தியாகங்களை நினைவு கூறும் வகையில் 5வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவினால் சந்தஹிரு சேய தூபியின் நிர்மானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்காக திறந்துவைக்கப்படவுள்ள இந்தத் தூபியின் கட்டமைப்பு பிரமாணங்கள் குறித்து விளக்கமளித்த பாதுகாப்புச் செயலாளர், 39 அடி உயரம் கொண்ட தூபியின் நாற்சதுர கட்டமைப்பு, 23 அடி உயரம் கொண்ட தேவதா கொட்டுவ, 73 அடி உயரம் கொண்ட கொத் கரல்ல மற்றும் அதன் மேல் 3 அடி உயரம் கொண்ட சூடா மாணிக்கம் என்பன அமைக்கப்படவுள்ளது என்றார்.

பக்தர் ஒருவரினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட இந்த சூடா மாணிக்கம் மேலும் அலங்கரிக்கப்பட்டு கொழும்பு கங்காராமை விஹாரையில் பக்தர்கள் பார்வையிட்டு வழிபடுவதற்காக சிறிது காலம் வைக்கப்பட்டு பின்பு ஏனைய பக்தர்கள் பார்வையிட்டு வழிபடுவதற்காக நாட்டின் பல பாகங்களுக்கும் கொண்டு செல்லப்படவுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

சந்தஹிரு சேய தூபியின் நிர்மானபணிகளுக்காக முப்படைவீரர்கள், பக்தர்கள் மற்றும் தனவந்தர்கள் ஆகியோரிடம் நிதி பங்களிப்பு பெற்றுக்கொள்ளபட்டு வருவதுடன், முப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர்களின் மனித வலு என்பன பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சந்தஹிரு சேய தூபியின் நாற்சதுரத்தில் புதையல் பொருட்களை பிரதிஷ்டை செய்யும் மகோட்ஷவம் கொவிட்-19 சுகாதார அறிவுறுத்தலுக்கு அமைய இடம்பெற உள்ளமை குறிப்பிடத் தக்கது.

இந்த செய்தியாளர் மாநாட்டில் பாதுகாப்பு அமைப்பின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தினேஷ் நாணயக்கார, பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேர்ணல் சந்திம குமாரசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.