கிழக்கு மாகாண பொஷன் போய தின நிகழ்வுகள் புகழ்பெற்ற தீகவாபி தளத்தில்
மார்ச் 17, 2021இந்த வருடத்திற்கான கிழக்கு மாகாணத்தின் பொஷன் போய தின பிரதான நிகழ்வுகள் பௌத்தர்களின் முக்கிய புனித வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகத் திகழும் தீகவாபி புண்ணிய ஸ்தலத்தில் இடம்பெற உள்ளதாக பாதுகாப்புச் செயலாளரும் கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.
குறித்த பிரதேசத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட புனித வஸ்துக்கள், பொஷன் போய தின நிகழ்வின் போது பக்தர்களின் தரிசனங்களுக்காக வைக்கப்பட உள்ளதாகவும் ஏனைய பக்தர்களின் தரிசனங்களுக்காக அவை பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தப் புனித வஸ்துக்கள் தீகவாபி நிர்மாணப்பணிகள் பூரணம் அடையும் போது அங்கு முழுமையாக பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாக குறிப்பிட்டார்.
சங்கைக்குரிய மகா சங்கத்தினர் மற்றும் பிரதம பௌத்த தேரர்கள் தலைமையில் தர்ம போதனைகள் மற்றும் பிரித் பாராயணம் என்பன இந்த போய தின நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்தார்.
தீகவாபி புனர்நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் பொருட்டு இன்று அங்கு விஜயம் செய்த போதே பாதுகாப்புச் செயலாளர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.
கள நிலவரங்களை ஆராய்ந்த அவர் மேலும் குறிப்பிடுகையில்:
கடந்த காலங்களில் தீகவாபி தூபியின் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவை சில காரணங்களினால் இடைநடுவில் கைவிடப்பட்டன. எனினும் இம்முறை மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, புத்த பெருமானின் ஆசீர்வாதத்துடன் அதன் முன்னைய பெருமை மீண்டும் கொண்டுவரும் வகையில் மூன்று வருடங்களுக்குள் நிறைவு செய்யப்பட்டு பக்தர்களின் வணக்க வழிபாடுகளுக்கு ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
தீகவாபி புனரமைப்பு திட்டத்திற்கு பொதுமக்களின் பங்களிப்பனை பெற்றுக்கொள்வதற்காக தீகவாபிய நம்பிக்கை நிதியம் நிறுவப்பட்டு உள்ளதாகவும் இதன் மூலம் பக்தர்கள் மற்றும் தனவந்தர்கள் தமது பங்களிப்பினை வழங்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், தீகவாபி புண்ணிய ஸ்தலத்துக்கு வருகை தரும் பக்தர்கள் தியானம் மற்றும் வழிபாட்டு நிகழ்வுகளை மேற்கொள்ளும் வகையில் மண்டபசாலை ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் சுற்றுச்சூழலில் நாகை மரம் உள்ளிட்ட மரவகைகள் நடுகை செய்யப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தீகவாபி புனர்நிர்மாணப் பணிகளுக்கு நாளாந்தம் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செங்கற்கள் தேவைப்படுவதாகவும் இவற்றினை உற்பத்தி செய்தல் மற்றும் எடுத்துச் செல்லல் நடவடிக்கைகளில் இராணுவ மற்றும் சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் எனவும் புனர்நிர்மான பணிகள் யாவும் தொல்பொருளியல் திணைக்களத்தின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, சிதைவடைந்த நிலையில் காணப்படும் லாஹுகலாவில் உள்ள நீலகிரி தூபி மற்றும் விகாரையை அண்டிய பிரதேசங்களில் புனர்நிர்மாண பணிகளை மேற்கொள்வதற்கான முயற்சிகள் தொடர்பாக அப்பகுதிக்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகளால் மீளாய்வு செய்யப்பட்டது.
இந்த விஜயத்தில் தீகவாபி விஹாரையின் பிரதம விஹாராதிபதி மகா ஓயா சோபித தேரர் மற்றும் கொழும்பு ஸ்ரீ சம்போதி விஹாரையின் பிரதம விஹாராதிபதி பொரலந்தே வஜிரஞான தேரர், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் (ஓய்வு), புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல் பண்டாரநாயக்க, பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தினேஷ் நாணயக்கார, ஜனாதிபதி செயலணியின் செயலாளரும் ஜனாதிபதி செயலகத்திக் சிரேஷ்ட உதவிச் செயலாளருமான ஜீவந்தி சேனநாயக்க, பிராந்திய சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், கட்டிடக்கலைஞர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், பொறியியலாளர்கள் மற்றும் அளவையியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.