சந்தஹிரு சேய தூபிக்கான புதையல் பொருட்களை அன்பளிப்பு செய்ய மேலும் ஆறு நாட்கள் அவகாசம்
மார்ச் 22, 2021அனுராதபுரம், சந்தஹிரு சேய தூபியின் நாற்சதுரத்தில் புதையல் பொருட்களை வைப்பு செய்வதற்காக கடந்த மூன்று தினங்களுக்குள் மாத்திரம் பெரும் தொகையான புதையல் பொருட்கள் கிடைக்க பெற்றுள்ளதுடன் இவற்றை ஒப்படைப்பதற்காக எதிர்வரும் 27 ஆம் திகதி வரையான ஆறு நாட்கள் கால அவகாசம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் நான்காவது பெரிய தாதுகோபுரமாக நிர்மாணிக்கப்படவுள்ள சந்தஹிரு சேய தூபியின் நாற்சதுரத்தில் புதையல் பொருட்களை வைப்பு செய்யும் மகோட்சவம் எதிர்வரும் 28 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், இதில் வைப்பு செய்வதற்கான புதையல் பொருட்களை பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் கடந்த 20ஆம் திகதி முதல் ஆரம்பமானது.
புதையல் பொருட்களை பொறுப்பேற்கவென பாதுகாப்பு அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள விஷேட குழுவினர் அனுராதபுரம், சந்தஹிரு சேய வளாகத்தில் பொருட்களை பொறுப்பேற்று வருகின்றனர்.
மூன்று தசாப்தங்களாக நீடித்த மிலேச்சத்தனமான பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக இல்லாதொழிக்க முப்படை, பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் மேற்கொண்ட தியாகங்களை நினைவு கூறும் வகையில் 5வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவினால் சந்தஹிரு சேய தூபியின் நிர்மானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், இதற்கான பூரண ஒத்துழைப்பை முப்படையினர், பக்தர்கள் மற்றும் தனவந்தர்களினால் வழங்கப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்தத் தாது கோபுரத்தில் நாற்சதுர அறைக்குள் பெறுமதியான புதையல் பொருட்களை வைப்பு செய்ய தாய் நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த படைவீரர்களின் பெற்றோர், மனைவி மற்றும் பிள்ளைகளும் தங்களது மகன், கணவன் மற்றும் தந்தை சார்பாக பெறுமதி வாய்ந்த புதையல் பொருட்களை வழங்குமாறு அவர் விஷேட வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.