படையினரால் நிர்மாணிக்கப்பட்ட மேலும் இரு வீடுகள் யாழ் குடும்பங்களுக்கு கையளிப்பு

ஏப்ரல் 10, 2019

யாழ் சுல்லிபுரம் பகுதியில் வதிவிட பிரச்சினையை எதிர்நோக்கிய வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் இரு குடும்பங்கள் தொடர்பாக படையினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து இலங்கை இராணுவத்தினரால் அவர்களுக்கான இரு புதிய வீடுகள் நிர்மாணித்து கொடுக்கப்பட்டன. இவ்விரு புதிய வீடுகளுக்குமான நிர்மாண பணிகள் யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தினால் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற வைபவத்தின்போது இப்புதிய வீடுகள் இரு குடும்பங்களுக்கும் கையளிக்கப்பட்டன. இவ்வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதியுதவி யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தினால் வழங்கப்பட்ட அதேவேளை நிர்மாணப்பணிகள் 14வது கஜபா படையணி மற்றும் 5வது விஜயபாகு காலாட்படையணி ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்டது. இவ்வீடுகளை கையளிக்கும் வைபவத்தில் யாழ் பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதேவேளை, இரு தனவந்தர்களின் உதவியுடன் பத்து துவிச்சக்கர வண்டிகள், குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களைச் சேர்ந்த பத்து சிறுவர்களுக்கு யாழ் பாதுகாப்பு தலைமையகத்தினால் வழங்கிவைக்கப்பட்டது. இத்துவிச்சக்கர வண்டிகள் பாடசாலைக்கும் வீடுகளுக்குமிடையிலான பயணத்தினை இலகுவாக்கும் வகையில் வழங்கப்பட்டன. பாடசாலைக்கும் வீடுகளுக்குமிடையிலான பயணத்தினை இலகுவாக்கும் வகையில் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இதுபோன்ற துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கும் திட்டத்தினால் வட பிராந்தியத்தில் பாடசாலைக்கும் வீடுகளுக்குமிடையிலான போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கிய நூற்றுக்கணக்கான மாணவர்கள் நன்மையடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.