ரொஷான் அபேசுந்தர அடுத்த நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டார்

ஏப்ரல் 16, 2021

விமானப்படை வீரரான ரொஷான் அபேசுந்தர கோப்ரல் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார். விமானப் படைத் தளபதி ஏயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவினால் நேற்றைய தினம் (ஏப்ரல்,15) அவர் கோப்ரலாக தரம் உயர்த்தப் பட்டார்.

அபேசுந்தரவின் நீச்சல் திறனை அங்கீகரிக்கும் வகையில் இந்த தரம் உயர்வு அளிக்கப்பட்டதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானப்படை வீரரான ரொஷான் அபேசுந்தர இலங்கையின் தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஷ்கோடி வரையான நீரிணைப் பகுதியினை நீந்திக் கடந்து ஆசியாவின் நெடுந்தூர நீச்சல் சாதனையை நிலைநாட்டி இருந்தார்.

இந்த நிகழ்வின் போது கோப்ரல் அபேசுந்தரவை விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன பாராட்டியதுடன் அவருக்கான வெகுமதிகளையும் வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் விமானப்படையின் நடவடிக்கைப் பிரிவு பணிப்பாளர், விமானப்படை விளையாட்டு குழுவின் பணிப்பாளர் மற்றும் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.