--> -->

ஐ.நா அமைதிகாக்கும் பணிகளுக்காக பயணமாகும் படைக் குழுவினர் வழியனுப்பி வைப்பு

ஏப்ரல் 21, 2021

ஐக்கிய நாடுகள்  அமைதிகாக்கும் பணிகளுக்காக மாலி நோக்கி பயணமாகும்  படைக் குழுவினர் வான நிலையத்தில் வைத்து இன்றைய தினம் (ஏப்ரல், 21) வழி அனுப்பி வைக்கப்பட்டனர். அமைதிகாக்கும் பணிகளுக்காக விஷேடமாக தொழில்முறை ரீதியாக பயிற்சிபெற்ற இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 243 படை வீரர்களே இவ்வாறு வாழ்த்தி வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.

பயணமாகின்ற அமைதிகாக்கும் படை குழுவில் இராணுவத்தின் சேவை படை அணி, கவச வாகன படையணி, பொறியியலாளர்கள் படையணி, பொறியியற் காலாற்படை படையணி, யுத்த தளவாட படையணி, மின்னியல் மற்றும் இலத்திரணியில் பொறியியல் படையணி, இராணுவ பொலிஸ்,  இராணுவ வைத்திய படையணி, பொது சேவைகள் படையணி ஆகிய படையணிகளை சேர்ந்த படைவீரர்கள் உள்ளடங்குகின்றனர்.

மேலும், இதே அமைதிகாக்கும்  படைக் குழுவைச் சேர்ந்த 31 படைவீரர்கள் நிருவாக தேவைகள் நிமித்தம் மேலும் சில நாட்களின் பின்னர் பயணமாகவுள்ளனர்.

இதேவேளை மாலியில் அமைதிகாக்கும் பணிகளை நிறைவு செய்த இரண்டாவது படைக் குழுவைச் சேர்ந்த 240 படைவீரர்கள் விரைவில் நாடு திரும்ப உள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த வழியனுப்பும் நிகழ்வில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.