போர்வீரர்களை சார்ந்து வாழ்பவர்களுக்கு நிவாரணம் அளிக்க அமைச்சரவை அங்கீகாரம்
ஏப்ரல் 29, 2021· நாடு முழுவதும் 30,000 மேற்பட்ட போர் வீரர்களை சார்ந்து வாழ்பவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை
· நாடு முழுவதையும் முற்றாக முடக்கும் எந்தவொரு தேவையும் தற்போதைக்கு இல்லை
· 2500 படுக்களைகளை தயார் செய்யும் நடவடிக்கைகளில் முப்படையினர்
பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக உயிரிழந்த முப்படை வீரர்கள் மற்றும் பொலிஸாரினை சார்ந்து வாழ்பவர்களுக்கு படைவீரர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வாழ்நாள் முழுவதும் வழங்கும் அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) இன்று தெரிவித்தார்.
உயிரிழந்த முப்படை வீரர்கள் மற்றும் பொலிஸாரை சார்ந்த உறவினர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 2020, செப்டம்பர் 10ம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.
இதன் மூலம் நாடு முழுவதும் அந்த சுமார் 30,000ற்கும் மேற்பட்ட படைவீரர்களை சார்ந்து வாழும் உறவினர்கள் நன்மை அடைய உள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.
உயிரிழந்த படைவீரர்களை சார்ந்து வாழும் அவர்களின் உறவினர்களுக்கு உறுதியளித்தவாறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், இருந்தபோதிலும் அவற்றைக் கோரி வீணான ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்றமையும் அவர் நினைவு கூர்ந்தார்.
இதற்கமைய, பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக உயிரிழந்த முப்படை மற்றும் பொலிஸ் வீரர்களுக்கு 55 ஆண்டுகள் நிறைவடையும் வரை வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளின் மொத்த தொகையை திருமணமான முப்படை மற்றும் பொலிஸ் வீரர்களை சார்ந்து வாழும் மனைவிமார்களுக்கு அவர்களது ஆயுட்காலம் வரை வழங்கப்பட உள்ளது.
மேலும், பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக உயிரிழந்த திருமணமான / திருமணமாகாத முப்படை மற்றும் பொலிஸ் வீரர்களின் பெற்றோர்களுக்கு 55 ஆண்டுகள் நிறைவடையும் வரை வழங்கப்படும் ரூ. 25,000.00 கொடுப்பனவினை, குறித்த பெற்றோர்களது ஆயுட்காலம் வரை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடு முழுவதையும் முற்றாக முடக்கும் எந்தவொரு தேவையும் தற்போதைக்கு இல்லை என்றும் தொற்றாளர்கள் அதிகமாக அடையாளங் காணப்படும் பிரதேசங்கள் மாத்திரமே முழுமையாக முடக்க தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்றார்.
நாளுக்கு நாள் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பினால் வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் அவற்றுக்கு முகம் கொடுக்கும் வகையில் 2500 படுக்களைகளை தயார் செய்யும் நடவடிக்கைகளில் முப்படையினர் ஈடுப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
Tamil