சினோபார்முக்கு சாதகமான பதில்

மே 08, 2021
  • ஜனாதிபதி மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவரிடையே காத்திரமான கலந்துரையாடல்

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் தெட்ரோஸ் அதனொம் மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையே நேற்றைய தினம் (மே, 07) ஸூம் இணைய தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றிகரமாக அமைந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கோவிட் -19 மற்றும் முதல் அலையை கட்டுப்படுத்துவதில் ஜனாதிபதியின் தலைமைத்துவத்தை பாராட்டிய அதேவேளை, அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க தனது அமைப்பு தயாராகவுள்ளதாகவும் டொக்டர் அதனோம் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா தொற்றின் முதல் அலை இலங்கையினால் வெற்றி கொள்ளப்பட்ட விதம் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தில் இடம்பெற்ற மாநாடுகளில்  கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதற்கமைவாக, தற்போது நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என உலக சுகாதார ஸ்தாபனம் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்ய உலக சுகாதார ஸ்தாபனம் உதவுமென நம்புவதாக ஜனாதிபதி கூறினார்.

தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலில் அவசரகால பயன்பாட்டிற்கு சினோபார்ம் பயன்படுத்துவதற்கான ஒப்புதல் இன்னும் 3 நாட்களில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அந்த ஒப்புதலுடன், இலங்கை மக்களுக்கு சினோபார்ம் தடுப்பூசி போட ஆரம்பிக்க முடியும்.

மேலும், உலக சுகாதார ஸ்தாபனம் தனது பிராந்திய மற்றும் கொழும்பு அலுவலகங்கள் மூலம் வணங்கிய ஒத்துழைப்புக்கு  ஜனாதிபதி தனது நன்றியினை தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.