விமானப் படையினரால் தயாரிக்கப்பட்ட 'ஈரப்பதனூட்டப்பட்ட ஒக்ஸிஜன் சிகிச்சை அலகு' ஜனாதிபதியிடம் கையளிப்பு

மே 15, 2021

இலங்கை விமானப்படையினரால் தயாரிக்கப்பட்ட 'வெப்பமாக்கி ஈரப்பதனூட்டப்பட்ட ஒக்ஸிஜன் சிகிச்சை அலகு' (HHOT) அன்மையில் ஜனாதிபதி கோட்டrபய ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

செயற்கை சுவாசக் கருவிகளை (வென்டிலேட்டர்களை, வழங்குவதன் மூலம் தேசிய சுகாதார திட்டத்தை வலுப்படுத்தும் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைய விமானப்படை ‘ஈரப்பதனூட்டப்பட்ட ஒக்ஸிஜன் சிகிச்சை அலகு’ உற்பத்தியினை ஆரம்பித்தது.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட மாதிரி அலகு, அதன் செயற்பாட்டு எல்லை , பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் செயல்திறன் தரங்களை சரிபார்க்க சுமார் 200 மணித்தியாலங்களுக்கும் அதிகமாக நேரம் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக விமானப் படை தெரிவித்துள்ளது.

பின்னர், இது இலங்கையின் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபைக்கு வழங்கப்பட்டு மொரட்டுவ பல்கலைக்கழகத்தால் உறுதிப்படுத்தப்பட்டபடி ஐ.இ.சி 60601 மின் பாதுகாப்பு தரத்திற்கு இணங்க 2020 ஜூன் 25 அன்று இரண்டாவது மதிப்பீட்டை வெற்றிகரமாக பூர்த்தி செய்தது.

இந்தத் திட்டத்திற்கான செலவு ரூ .1.5 மில்லியன் என முன்னர் மதிப்பிடப்பட்டிருந்தபோதும் பொறியியலாளர் குழுவின் அர்ப்பணிப்புடன் கூடிய செயற்பாடு காரணமாக ரூ. 300,000 செலவில் தயாரிக்கப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இந்த மாதிரியின் சோதனை நிறைவு பெற்று மருத்துவ பரிசோதனைகளுக்கான உபகரணமாக அங்கீகாரமளிக்கப்பட்டன.

தேசிய வைத்தியசாலை சோதனைகளுக்குப் பின்னர் முன்மாதிரி பிரிவு இப்போது வேரஹெரவின் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ளது. அத்துடன் விமானப் படையினரால் தயாரிக்கப்பட்ட மேலும் 2 அலகுகள் விமானப்படை வைத்தியசாலைகளில் செயற்பட்டு வருகின்றன.

விமானப்படை நிபுணர்கள் மற்றும் பொறியியல் குழுக்கள் மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து விமானப்படை தளபதியின் மேற்பார்வையில் இந்த திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), சுகாதார அமைச்சின்செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க (ஓய்வு), விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷனா பத்திரன, வடிவமைப்புக் குழுவின் மருத்துவ நிபுணர் டாக்டர் திலங்க ரத்னபாலாமற்றும் விமானப்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.