வட பகுதியில் மேலும் பல இடைநிலை பராமரிப்பு நிலையங்கள்
மே 15, 2021நாட்டில் வைரஸ் பரவல் நிலையை எதிர்கொள்ளும் வகையில் யாழ் பாதுகாப்பு படை கட்டளைத் தலைமையக படை வீரர்களினால் வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரி கட்டிடம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 200 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் இடைநிலை பராமரிப்பு நிலையமாக மாற்றி அமைக்கப்பட்டது.
இந்த இடைநிலை பராமரிப்பு நிலையத்தில் பருத்தித்துறை, மாந்திகை ஆதார வைத்தியசாலையின் மருத்துவ குழுக்களினால் வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படவுள்ளன.
கொவிட் - 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலுக்கமைவாக கொவிட் -19 வைரஸினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வசதிகளை விரிவுபடுத்துவதில் பாதுகாப்புப்படை தலைமையகங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
இதற்கமைவாக, வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தினால் எந்த அவசரநிலையையும் எதிர்கொள்ளும் வகையில், வவுனியா பொருளாதார மத்திய நிலையம், மன்னார் டேர்கி சிட்டி தனியார் பாடசாலை, வஹமலுகொல்லேவ மத்திய நிலையம், கல்கிரியாகம சிவில் பாதுகாப்பு படைத் தலைமையகம், மிஹிந்தலை நித்தியகம சிவில் பாதுகாப்பு படைத் தலைமையகம் ஆகிய இடங்களில் மொத்தம் 770 படுக்கைகளுடன் கூடிய இடைநிலை பராமரிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வட மத்திய மற்றும் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள இந்த ஐந்து இடைநிலை பராமரிப்பு நிலையங்களும் அனுராதபுர மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர்கள் மற்றும் இந்த மாவட்டங்களில் உள்ள பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.