இன நல்லிணக்கத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டிகள்

ஏப்ரல் 02, 2019

இன நல்லிணக்கத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான உதைபந்தாட்ட போட்டிகள் இலங்கை இராணுவத்தினரின் கிழக்கு தலைமையகத்தினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டது. 'கிழக்கு கட்டளைத்தளபதி வெற்றிக்கிண்ண' த்திற்கான உதைபந்தாட்ட போட்டிகள் மட்டக்களப்பு வேபர் அரங்கில் கடந்த ஞாயிறன்று (மார்ச், 31) இடம்பெற்றதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாணத்தின் ஒன்பது பிராந்திய அணிகள் பங்கேற்ற இப்போட்டியின் முதல் சுற்றுபோட்டிகள் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்றன. ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு அரங்கில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் மட்டக்களப்பு உதைபந்தாட்ட கழகம் வெற்றியீட்டி 'கிழக்கு கட்டளைத்தளபதி வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கிக்கொண்டது. வெற்றியீட்டிய அணிகளுக்கு ரூ. 75,000.00 ரொக்க பரிசு வழங்கப்பட்டதுடன் இரண்டாம் இடத்தைப்பெற்ற அணிகளுக்கும் திறமைகளை வெளிக்காட்டிய வீரர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பணப்பரிசில்கள் என்பனவும் வழங்கப்பட்டது.

இப்போட்டியில் அம்பாறை உதைபந்தாட்ட கழகம் மற்றும் திருகோணமலை-கிண்ணியா உதைபந்தாட்ட கழகம் ஆகியன முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்றுக்கொண்டன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இறுதிப் போட்டியில் கலந்து சிறப்பித்த இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்கள் வெற்றியீட்டிய கழகங்களுக்கு வெற்றிக் கிண்ணத்தினையும் சான்றிதழ்களையும் வழங்கிவைத்தார்.

இவ் இறுதிப்போட்டியை கண்டுகளிக்க சமய தலைவர்கள், கிழக்கு கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், உதைபந்தாட்ட ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் வருகை தந்திருந்தனர்.

இன நல்லிணக்கத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இராணுவத்தினரால் கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.