--> -->

ஸ்ரீ ஜயவர்தனபுர பாதுகாப்பு தலைமையக கட்டிடத்தொகுதி வளாகத்தில் பாதுகாப்பு அமைச்சின் பணிகள் ஆரம்பம்

மே 18, 2021

ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்பு தலைமையக கட்டிடத்தொகுதி வளாகத்திற்கு மாற்றப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் பணிகள் இன்று (மே 18) சுபவேளையில் ஆரம்பமானது.

பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றி தினத்தின் 12 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வின் ஒர் அங்கமாக மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) புதிய பாதுகாப்பு கட்டிட வளாகத்தை திறந்து வைத்தார்.

புதிய தொடக்கத்தை அடையாளப்படுத்தும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் உத்தியோகபூர்வ ஆவனத்தில் கையொப்பமிட்டு சுப வேளையில் பாதுகாப்பு அமைச்சின் பணிகளை ஆரம்பித்தது வைத்தார்.

தனது புதிய அலுவலகத்தின் அலுவலகப் பணிகளை சுபவேளையில் தொடங்கிய ஜெனரல் குணரத்ன, தனது முதற் பணியாக அண்மையில் அமைச்சரவையினால் ஒப்புதல் அளிக்கப்பட்ட போர்வீரர்களை சார்ந்து வாழ்பவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கும் ஆவணங்களை முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

அத்துடன் ஓய்வுபெற்ற படைவீரர்களின் குழந்தைகளை கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் அனுமதிப்பதற்கான அனுமதியும் இதன்போது வழங்கப்பட்டது.

"இந்த மறக்கமுடியாத நாளில் இது நமது போர் வீரர்களுக்கு நாம் செலுத்தும் ஒரு அஞ்சலியாகும் " என பாதுகாப்புச் செயலாளர் கூறினார்.

மேலும் "இது நாட்டின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

வழமையான இலங்கை மரபுகளை நிலைநிறுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட மங்கள விளக்கேற்றல் மற்றும் பால் பொங்க வைத்தல் எனும் கலாச்சார நிகழ்வுகளை கொண்ட இந்த மங்களகர விழா, சுகாதார வழிகாட்டல் மற்றும் அறிவுருத்தல்களுக்கு அமைய இடம்பெற்றன.

மேலும், தாய் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த மற்றும் அங்கவீனமுற்ற இராணுவ , கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸார், அதிகாரிகளுக்கு ஆசீர்வாதம் வேண்டி சமய நிகம்வுகளும் இதன்போது இடம்பெற்றது.

போரின்போது உயிர்நீத்த மற்றும் அவயவங்களை தியாகம் செய்த போர் வீரர்களை நினைவுகூரும் விதமாக இரவு நேர பிரித் பாராயனமும் இந்த புதிய பாதுகாப்பு கட்டிட வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

இராணுவ நிபுணத்துவத்துடன் கட்டப்பட்ட இந்த புதிய அதிநவீன வளாகத்தில் முன்னர் வெவ்வேறு இடங்களில் அமைந்திருந்த பாதுகாப்பு அமைச்சின் அனைத்து பிரிவுகளும் ஒரே இடத்தில் இயங்கவுள்ளது.

இராணுவ தலைமையகம் சில ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாப்பு தலைமையக வளாகத்திற்கு மாற்றப்பட்டது, மேலும் விமானப்படை மற்றும் கடற்படையின் தலைமையகங்களும் எதிர்காலத்தில் இவ்வளாகத்திற்கு மாற்றப்படவுள்ளன. முப்படைகளினதும் தலைமையகம் எதிர்காலத்தில் ஒரே இடத்தில் நடவடிக்கைகளைத் தொடங்கியவுடன் சிறந்த பெறுபேற்றினை பெற்றுக்கொள்ள முடியும்.

வண. பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர், பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா தலைவி சித்ரானி குணரத்ன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜயனாத் கொலம்பகே(ஓய்வு), பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் (ஓய்வு), பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன, பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரட்ன, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், இலங்கை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரியல் அட்மிரல் அருண ஏக்கநாயக்க மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

கொவிட் நிலைமையை கருத்திற் கொண்டு சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.