ஜனாதிபதி தலைமையில் 769 கிலோகிராம் கொக்கேன் போதைப்பொருளை பகிரங்கமாக அழிக்கும் நடவடிக்கை
ஏப்ரல் 01, 2019769 கிலோகிராம் கொக்கேன் போதைப்பொருளை பகிரங்கமாக அழிக்கும் நடவடிக்கை இன்று (ஏப்ரல், 01) களனி களஞ்சியத் தொகுதியில் இடம்பெற்றது. கடந்த காலங்களில் சட்ட அமலாக்க முகவர் நிலையங்கள் மூலம் கைப்பற்றப்பட்ட 10 பில்லியன் ரூபா பெறுமதியான கொக்கேன் போதைப்பொருள் அழித்தல் செயற்பாட்டிற்காக புத்தளத்தில் உள்ள சீமெந்து கூட்டுத்தாபன வளாகத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்னர் செறிவு குறைக்கும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.
இன்று காலை கோணவலவில் உள்ள களஞ்சியசாலையில் இடம்பெற்ற போதைப்பொருளை பகிரங்கமாக அழிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் கலந்துகொண்டார்.
குறித்த இந்நிகழ்வு போதைப்பொருள் பாவனைக்கு எதிராக சர்வதேச நியமங்களுக்கேற்ப மேற்கொள்ளப்பட்ட வரலாற்று நிகழ்வு ஆகும்.
நாட்டில் இருந்து போதைப் பொருளை முற்றாக ஒழிப்பதற்கு முடிவு செய்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக பிரதான நாடுகளில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்ப உபகரணங்களை தருவிப்பதற்கான அவசிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார். தற்போது நவீன சாதனங்கள் அல்லது தொழில்நுட்ப வழிமுறைகளின் உதவியின்றி இத்தகைய அனைத்து போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
உரிய பரிசோதனைகளுக்குப் பின்னர் போதைப்பொருட்கள் உயர் பாதுகாப்பிற்கு மத்தியில் வெளிப்படையான முறையில் அழிவு செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டது. இதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு படிமுறைகளும் சட்ட, சட்ட அமலாக்க, போதைப்பொருள், எக்ஸ்சைஸ் மற்றும் பிற முகவர் நிலையங்களின் பிரதிநிதிகளால் எந்தவித முரண்பாட்டிற்கும் இடமில்லாத வகையில் முன்னெடுக்கப்பட்டது.
மேலும், இந்நிகழ்வை ஊடகங்களும் பொதுமக்களும் நேரடியாக பார்ப்பதற்கான சந்தர்ப்பமும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அமைச்சர்கள், பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ, முப்படைகளின் பிரதம அதிகாரி, பொலிஸ்மா அதிபர், சிரேஷ்ட அரச மற்றும் முப்படை அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இது பொதுமக்கள் முன்னிலையில் போதைப்பொருள்கள் பகிரங்கமாக அழிக்கப்படும் இரண்டாவது சந்தர்ப்பமாகும். கடந்த ஆண்டில் 926 கிலோகிராம் போதைப்பொருள் பொதுமக்கள் மத்தியில் இவ்வாறு பகிரங்கமாக அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.