பொலிஸ் தடகள விளையாட்டுப்போட்டி- 2019 நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பிப்பு

மார்ச் 30, 2019

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் வருடாந்த தடகள விளையாட்டுப் போட்டி நிறைவு தின நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்கள் இன்று (மார்ச், 30) கலந்து சிறப்பித்தார். பொலிஸ் திணைக்களத்தின் 82ஆவது தடகள விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வுகள் கொழும்பு -4 பம்பலப்பிட்டிய பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகைதந்த பாதுகாப்பு செயலாளரை பொலிஸ் மா அதிபர் திரு. பூஜித ஜயசுந்தர அவர்கள் வரவேற்றார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர் அவர்கள், பொலிசார் மத்தியில் விளையாட்டுத்திறனை விருத்தி செய்வதற்காக மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகளை பாராட்டியதுடன், இவ்விளையாட்டு வீரர்கள் சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் இலங்கை சார்பாக பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டதாகவும் அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

நாட்டில் விளையாட்டுதுறை வளர்ச்சிக்காக முப்படை மற்றும் பொலிஸ் வீரர்களின் பங்களிப்பபு குறிப்பிடத்தக்கது என தெரிவித்த அவர், விளையாட்டுத்துறையில் அதன் இடத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக அவர்கள் ஆற்றிய அர்ப்பணிப்புக்களையும் பாராட்டினார்.
இப்போட்டி நிகழ்வில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளில் தமது திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற பொலிஸ் வீரர்களை பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை பாதுகாப்பு செயலாளர் அவர்கள் வழங்கிவைத்தார். இதன்போது பாதுகாப்பு செயலாளர் அவர்களுக்கு பொலிஸ் மா அதிபர் அவர்கள் நினைவுச்சின்னம் ஒன்றையும் வழங்கிவைத்தார்.


இந்நிகழ்வில், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், அரச அதிகாரிகள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான பொலிஸாரும் கலந்துகொண்டனர்.