கப்பல் குப்பைகள் குறித்து அதிகாரிகளால் கடலோர குடியிருப்பாளர்களுக்கு விளக்கமளிப்பு

மே 27, 2021

இலங்கை கடற்படை மற்றும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை என்பன தீ விபத்தில் சிக்கிய கப்பலில் இருந்து கரை ஒதுங்கியிருக்கும் கழிவுப்பொருட்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதுடன் இலங்கை கடலோர பாதுகாப்பு படையுடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாட்டை மேற்கொண்டது. 

கரை ஒதுங்கியிருக்கும் கழிவுப்பொருட்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திக்கோவிட்ட முதல் சிலாபம் மற்றும் வெள்ளவத்தை முதல் பானந்துறை வரையில் உள்ள பிராந்திய பொதுமக்களுக்கு விளக்கமளித்து வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது. 

தீ விபத்துக்குள்ளான கப்பலில் விழுந்து கிடக்கும் பல்வேறு பாகங்கள், பகுதியளவு எரிந்த கொள்கலன்கள், நேற்று (மே 26) நீர்கொழும்பு தலஹேன கடற்கரையில் கரையொதுங்கி காணப்பட்டது. 

நாட்டில் தற்போது நிலவும் வானிலை காரணமாக, திகோவிட்ட முதல் சிலாபம் வரை குப்பைகள் கடற்கரையை எட்டும் வாய்ப்பு உள்ளது என கடற்படை மேலும் தெரிவித்துள்ளது. மேலும், பிராந்திய மக்கள் மற்றும் மீனவர்கள இந்த தீங்கு விளைவிக்கின்ற கூறுகளை கையாளவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ள் நங்கூரமிட்டுள்ள இடத்தில் கப்பல் சிந்துராலா மற்றும் இந்திய கடலோர காவல்படை கடல் மாசு கட்டுப்பாட்டு கப்பல்கள் ‘வஜ்ரா’ மற்றும் ‘வைபவ்’ ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளன.