தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் இராணுவமும் இணைவு
மே 30, 2021சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருடன் இணைந்து இராணுவமும் நாட்டின் தென் பகுதியின் நியமிக்கப்பட்ட பகுதிகளில் அரசின் தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு அமைவாக நேற்று தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இராணுவ மருத்துவ அதிகாரிகள் மற்றும் இராணுவ மருத்துவப் படையணியின் ஒத்துழைப்புடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்றறைய தினமும் (மே, 30) தடுப்பூசி வழங்கும் திட்டம் தொடர்கிறது என இராணுவம் தெரிவித்துள்ளது.
குறித்த தடுப்பூசி வழங்கல் நடவடிக்கை மாத்தறை மாவட்டத்தில் உயன்வத்தை, பவரசிறி நிவேரராமய, ரன்செங்கொட ஸ்ரீ விஜயராமய மற்றும் கெகனாதுரா ராஜமஹா விஹாரை ஆகிய இடங்களிலும் காலி மாவட்த்தில் அதானிக முன்பள்ளி, எல்பிட்டிய ஆனந்தா கல்லூரி, ஹபராதுவ தர்மிகா வித்யாலயம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நடமாடும் தடுப்பூசி வழங்கல் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்டதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப நாட்டின் தெற்கு, வடமத்திய, வடமேல், மற்றும் மத்திய மாகாணங்களை உள்ளடக்கிய காலி, மாத்தறை, மாத்தளை, குருநாகல் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் படையினர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது.