மித்ர சக்தி கூட்டுப் பயிற்சி - VI நாளை ஆரம்பம்
மார்ச் 25, 2019இலங்கை – இந்திய இராணுவத்தின் ஒருங்கிணைத்த கூட்டுப் பயிற்சியான மித்ர சக்தி கூட்டுப் பயிற்சி - VI நாளை தியத்தலாவ 1வது கெமுனு வாட்ச் படை வளாகத்தில் ஆரம்பமாகவுள்ளது. இரு நாட்டு இராணுவத்தினரிடையே நிலவும் உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் இரு வார கூட்டுப்பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக்கூட்டுப்பயிற்சியில் இரு தரப்பிலும் இருந்து தலா 120 படைவீரர்கள் பங்கேற்கவுள்ளனர். குறித்த இப் பயிற்சித்திட்டம், பயங்கரவாத மறைவிடங்களில் உருவகப்படுத்தப்பட்ட தாக்குதல்கள், நீண்ட தூர கண்காணிப்பு ரோந்து நடவடிக்கை, சிறிய குழு நடவடிக்கை, காலாட்படை ஆயுத வினைத்திறன், பயங்கரவாத நடைமுறைகளை எதிர்கொள்ளுதல், தற்கொலை தாக்குதல், மேம்பட்ட வெடிக்கும் சாதனங்கள் முதலியவற்றில் இராணுவ தந்திரோபாயங்கள், அனுபவங்கள், காலாட்படை தொழில்நுட்ப பரிமாற்றத்தைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இடம்பெறவுள்ளது.
இக்கூட்டுப்பயிற்சியில் பங்கேற்கும் இந்திய தரப்பு அணியினை கேணல் பார்த்தசாரதி ராய், கேணல் ஸோம்பிட் கோஷ், மேஜர் பூஜம் மன்ஹாஸ் மற்றும் மேஜர் ரோஹித் குமார் திரிபதி ஆகியோர் வழி நடத்தவுள்ளனர். மேலும், இக்கூட்டுப்பயிற்சியின் பயிற்சி பணிப்பாளராக 21ஆவது பிரிவின் பொது கட்டளை அதிகாரி , பிரிகேடியர் குமார் ஜெயபத்திரன அவர்கள் கடமையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.