தேரவாத திரிபீடகத்தை யுனெஸ்கோ உலக ஞாபகப் பதிவேட்டில் உட்படுத்துவதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது

மார்ச் 24, 2019

புத்தபெருமானின் போதனைகளை பாதுகாத்து, பலப்படுத்தி எழுத்து மூலம் உலகிற்கு முன்வைக்கும் பொறுப்பு இலங்கையர்களான எம்முடையதாகும் என ஜனாதிபதி தெரிவிப்பு

திரிபீடகத்தை உலக மரபுரிமையாக ஆக்குவதற்கு ஜனாதிபதி எடுத்த நடவடிக்கையானது உலகவாழ் பௌத்த சமூகத்திற்காக மேற்கொண்ட உன்னத பணி என மகாசங்கத்தினரால் பாராட்டு

திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் முன்மொழிவு சங்கைக்குரிய மூன்று நிக்காயக்களினதும் மகாசங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (23) பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களால் இந்த முன்மொழிவு உத்யோகபூர்வமாக ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி ஹெனா சிங்கரிடம் கையளிக்கப்பட்டது.

உன்னத திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்துவதற்கு ஜனாதிபதி அவர்கள் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து திரிபீடகத்தை இன்னும் பல்லாயிரக் கணக்கான வருடங்கள் பாதுகாத்து உலக மரபுரிமையாக ஆக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

புத்த பெருமானின் போதனைகளை உள்ளடக்கிய திரிபீடகத்தை பாதுகாத்து வளப்படுத்தி எழுத்து மூலம் அதனை உலகிற்கு முன்வைக்கும் பொறுப்பு இலங்கையர்களான எம்மைச் சார்ந்ததாகுமென்று ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார். நூல் உருப் படுத்தப்பட்ட திரிபீடகம் அச்சுப் பிரதியாக வெளியிடப்படும் வரை அதனை பாதுகாத்த பெருமை இலங்கை மகாசங்கத்தினரையே சாரும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், யுனெஸ்கோவின் உலக ஞாபக நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இந்த உன்னத மரபுரிமை பட்டியல்படுத்தப்படுவதை பார்க்கிலும் முக்கியத்துவம் பெறுவது இதன் மூலம் இதன் உரிமை மற்றும் பொறுப்பு தொடர்பில் இலங்கை முழு உலகினதும் அங்கீகாரத்தை பெறும் சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். எத்தகைய எதிர்ப்புகள், சவால்கள் வந்துபோதும் திரிபீடகத்தை உலக மரபுரிமையாக ஆக்குவதற்கு எடுத்து வைக்கப்பட்ட எட்டினை வெற்றிகரமாக முன்கொண்டு செல்வதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

இங்கு விசேட அனுசாசன உரையை நிகழ்த்திய மகாநாயக்க தேரர்கள் உன்னத திரிபீடகத்தை உலக மரபுரிமையாக்குவதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை உலகவாழ் பௌத்த மக்களின் பாராட்டை பெறும் எனக் குறிப்பிட்டனர்.

சியாமோபாலி மல்வத்தை பிரிவின் மகா நாயக்க தேரர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகாநாயக்க தேரர், சியாமோபாலி அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய வரக்காகொட ஞானரத்னாபிதான, அமரபுர மகா நிக்காயவின் கொட்டுகொட தம்மாவாச மகா நாயக்க தேரர், ராமான்ஞய மகா நிக்காயவின் நாபான பேமசிறி நாயக்க தேரர் உள்ளிட்ட மகா நாயக்க தேரர்கள், அனுநாயக்க தேரர்கள் மற்றும் மகாசங்கத்தினரும் தேரவாத பௌத்த நாடுகளான மியன்மார், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகளின் மகாசங்கத்தினரும், வெளிநாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்துள்ள மகாசங்கத்தினரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான காமினி ஜயவிக்ரம பெரேரா, சஜித் பிரேமதாச உள்ளிட்ட அமைச்சர்களும் ஆளுநர்கள், மாகாண முதலமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி ஹெனா சிங்கர், யுனெஸ்கோ அமைப்பு உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்களின் பிரதிநிதிகள், வெளிநாட்டு தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட இராஜதந்திரிகளும் தியவடன நிலேமே நிலங்க தேல பண்டார, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, அரசாங்க அதிகாரிகள் மற்றும் பெருந்தொகையான பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நன்றி: pmdnews.lk