சிரேஷ்ட பிரஜைகளுக்கு ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக் கொள்ள ஜூன் 10 , 11 ல் விஷேட போக்குவரத்து ஏற்பாடுகள்

ஜூன் 09, 2021

சிரேஷ்ட பிரஜைகள் தமது ஓய்வூதிய  கொடுப்பனவை பெற்றுக் கொள்ள ஜூன் 10ம் மற்றும் 11ம் திகதிகளில் முப்படையினரால் விஷேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மாவட்ட / பிரதேச செயலகங்கள் சம்பந்தப்பட்ட கிராம சேவக அதிகாரிகளின் வேண்டுகோளிற்கமைய அந்தந்த பகுதிகளில் உள்ள இராணுவ அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷவினால் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவிடம் விடுக்கப்பட்ட பணிப்புரைக்கமைய முப்படையினரால் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளும் சிரேஷ்ட பிரஜைகள் இந்த போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொள்ள தத்தமது கிராம சேவை அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளுமாறு இராணுவம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஆண்டும் நாடு முழுவதும் முடக்கப்பட்டிருந்த வேளையில் சுமார் 5 இலட்சத்துக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகள் தமது ஓய்வு பெற்றுக்கொள்ள முப்படையினர் இவ்வாறு போக்குவரத்து வசதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.