தீகவாபி தூபியின் மறுசீரமைப்பு பணிகளின் முன்னேற்றம் தொடர்பில் மீளாய்வு

ஜூன் 10, 2021

தீகவாபி தூபி மறுசீரமைப்பு திட்டத்தின் தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் பாதுகாப்பு அமைச்சின் இன்று (ஜூன், 10) இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் பாரம்பரியங்களை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணியின் தலைவர் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் (ஓய்வு ) தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம், செங்கற்கள் உற்பத்தி செயல்முறை மற்றும் அதற்காகப் பணியாற்றும் தொழிலாளர்கள், நிதி நிலைமைகள், நிர்வாகம், மேற்பார்வை மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் என்பன தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் விடுக்கப்பட்டுள்ள ஆலோசனைக்கமைய வரையறுக்கப்பட்ட ஆளணியை கொண்டு சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி நிர்மாணப் பணிகளை முன்னெடுக்க இதன்போது பணிப்புரை வழங்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் தீகவாபியின் பிரதம விகாராதிபதி வண. மகாஓயா சோபித தேரர், புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி கபில குணவர்தன, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ் (ஓய்வு), தேசிய பாரம்பரிய, கலை மற்றும் கிராமிய கலை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் நிஷாந்தி ஜெயசிங்க, தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அனுர மானதுங்க, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர (ஓய்வு), கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் பாரம்பரியங்களை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணியின் செயலாளரும் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளருமான ஜீவந்தி சேனாநாயக்க, ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்கள்,சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், வரைபட கலைஞர்கள், தொல்பொருள் ஆய்வாளர்கள், பொறியியலாளர்கள் மற்றும் நில அளவையியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.