இந்திய கடலோர பாதுகாப்பு படை வழங்கிய ஒத்துழைப்புக்கு பாதுகாப்புச் செயலாளர் நன்றி தெரிவிப்பு

ஜூன் 11, 2021

அண்மையில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலின் அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்வதற்கு இந்திய கடலோர பாதுகாப்பு படை வழங்கிய ஒத்துழைப்புக்கு பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன (ஓய்வு) கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அதிமேதகு கோபால் பக்லேவிற்கு (நன்றி தெரிவித்தார்.

இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கு இடையில் பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜூன், 11) இடம்பெற்ற சந்திப்பின்போதே பாதுகாப்புச் செயலாளர் இவ்வாறு நன்றி தெரிவித்தார்.

மேலும் இரு நாடுகளுக்கு இடையில் நீண்டகாலமாக நிலவும் இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்புகள் தொடர்பாகவும் பாதுகாப்புச் செயலாளர் இதன்போது நினைவுகூர்ந்தார்.

பாதுகாப்பு ஒத்துழைப்புகள் தொடர்பாக இந்திய தூதுக்குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பாதுகாப்புச் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலின் போது தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு இரு நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக நிலவும் இராணுவ பயிற்சி பரிமாற்றத்தின் சீரான செயல்பாடு தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக இந்த கலந்துரையாடலின்போது ஆராயப்பட்டன'

அத்தோடு இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

கொவிட்-19 பரவல் தடுப்பு தொடர்பான சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இடம் பெற்ற இந்தக் கலந்துரையாடலில் , கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, விமானப் படைத் தளபதி ஏயார் மார்ஷல் சுதர்ஷன பாத்திரன, தேசிய புலனாய்வு பிரதானி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ அதிகாரி பிரிகேடியர் தினேஷ் நாணயக்கார, மேலதிக செயலாளர் பி பி எஸ் சி நோனிஸ், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் விகாஷ் சூத் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.