ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பான இலங்கையின் அவதானிப்புக்கள்
ஜூன் 15, 20212021 ஜூன் 10ஆந் திகதி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டமைக்கு வெளிநாட்டு அமைச்சு வருத்தம் தெரிவிக்கின்றது. 'இலங்கையில் நிலைமை, குறிப்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள்' என்ற தலைப்பிலான இந்தத் தீர்மானமானது உண்மைக்கு மாறான கருத்துக்களைக் கொண்டிருப்பதுடன், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியில் இலங்கை மேற்கொண்டுள்ள பன்முக முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தவில்லை.
இலங்கை மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூரமான பயங்கரவாதச் செயல்களுக்குத் தீர்வு காண்பதற்காக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் விதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என இலங்கை அரசாங்கம் ஆரம்பத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றது. இந்த சூழலில், 2019 ஆம் ஆண்டின் ஈஸ்டர் ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல்களால் பல ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகள் உட்பட கணிசமான உயிரிழப்புக்கள் ஏற்பட்டமை நினைவு கூரப்படுகின்றது.
இருதரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி, வெளிநாட்டு அமைச்சின் மூலமாக, ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு வழக்கமான, துடிப்பான மற்றும் நல்லுறவு உரையாடலை இலங்கை அரசாங்கம் பேணி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். பிரஸ்ஸல்ஸில் உள்ள இலங்கைத் தூதரகத்தினூடாக ஐரோப்பிய ஆணைக்குழு, ஐரோப்பிய சபை மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றம் ஆகியவற்றுடன் ஆக்கபூர்வமான உரையாடலை அரசாங்கம் பேணி வருவதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் மற்றும் கொழும்பைத் தளமாகக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்களுடன் அரசாங்கத்தின் சிரேஷ்ட இடைத்தரகர்களின் ஈடுபாடுகளின் காரணமாக இந்தக் கலந்துரையாடல் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையின் ஓர் அங்கமாக, 27 முக்கிய சர்வதேச சாசனங்களுக்கு இணங்க ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. + ஐ மீளாய்வு செய்வது குறித்து, ஐரோப்பிய ஆணைக்குழுவுடன் இலங்கை தொடர்ந்தும் கலந்துரையாடி வருகின்றது. 2020-2021 ஆம் ஆண்டிற்கான ஐரோப்பிய ஒன்றிய ஜி.எஸ்.பி. + கண்காணிப்பு செயன்முறையின் மூன்றாம் சுற்று மதிப்பாய்வு நடைபெற்று வருகின்றது.
பரந்த அளவிலான ஒத்துழைப்பு தொடர்பான இலங்கையின் முன்னேற்றம் குறித்து வருடாந்த ஐரோப்பிய ஒன்றிய - இலங்கை கூட்டு ஆணைக்குழுவில் இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விளக்கமளித்ததுடன், இதன் 23வது அமர்வு 2021 ஜனவரியில் கூட்டப்பட்டது. கூட்டு ஆணைக்குழுவின் கீழ் செயற்படும் சம்பந்தப்பட்ட செயற்குழுக்கள் மற்றும் குழுக்கள் மூலம் மேலதிக புதுப்பிப்புக்கள் வழங்கப்படுகின்றன.
தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் குறித்து, திருத்தம் செய்யும் நோக்கில் பின்வரும் அவதானிப்புக்களைச் சமர்ப்பிப்பதற்கு அமைச்சு விரும்புகின்றது.
அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட இத்தகைய நடவடிக்கைகள் சிறுபான்மையினர் உட்பட அதன் அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான அரசியலமைப்பு ஆணை மற்றும் சர்வதேசக் கடமைகளுக்கு அமைவாகவேயாகும். இலங்கையின் அரசியலமைப்பின் பிரிவு 12 (1) இன் பிரகாரம், குறிப்பிட்ட ஏற்பாடானது, சட்டத்தின் முன் அனைத்து நபர்களும் சமமானவர்கள் என்பதையும், சட்டத்தின் சமமான பாதுகாப்பிற்கு உரித்துடையவர்கள் என்பதையும் உறுதி செய்கின்றது. மேலும், அரசியலமைப்பின் பிரிவு 12 (2) ஆனது, இனம், மதம், மொழி, சாதி, பாலினம், அரசியல் கருத்து, பிறந்த இடம் அல்லது அத்தகைய காரணங்களை அடிப்படையாகக் கொண்ட பாகுபாட்டை தடை செய்கின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளை மறுபரிசீலனை செய்வதற்கான செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இந்த சூழலில், தற்போதுள்ள சட்டங்களை ஆய்வு செய்வதற்கும் தேவையான திருத்தங்களை பரிந்துரைப்பதற்கும் ஒரு அமைச்சரவைத் துணைக்குழுவை நியமிப்பதற்கான செயன்முறையொன்று செயற்பாட்டில் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளலாம். இந்த முயற்சியை நோக்கி, ஏனைய அதிகார வரம்புகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச சிறந்த நடைமுறைகள் மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தினத் தாக்குதல்கள் குறித்து விசாரணை ஆணைக்குழு அளித்த பரிந்துரைகள் குறித்து அரசாங்கம் வரையப்படும். பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தன்னிச்சையாக கைது செய்யப்படுவதற்கும் இலங்கையில் முஸ்லிம் அல்லது ஏனைய சிறுபான்மைக் குழுக்களை தடுத்து வைப்பதற்கும் முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற கூற்றை அரசாங்கம் நிராகரிக்கின்றது.
பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையின்ர் ஆதரவாக வாக்களிப்பதன் மூலம் என்ற வகையில் அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள நடைமுறைக்கு இணங்க 20வது திருத்தம் இயற்றப்பட்டுள்ளது. இத்தகைய சட்டத்தைப் பொறுத்தவரை, அடிப்படை உரிமைகள் அத்தியாயம் உட்பட அரசியலமைப்பிற்கு முரணான மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதைத் தடுக்கும் நோக்கில் வெளிப்படைத்தன்மை மற்றும் நீதித்துறை மீளாய்வு போன்ற பல உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.
பொறுப்புக்கூறல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக மற்றும் நல்லிணக்கத்தில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை அடைவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மனித உரிமைகள் பேரவை மற்றும் ஐரோப்பிய ஒன்றிய இடைத்தரகர்களை அரசாங்கம் தொடர்ந்தும் புதுப்பித்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதியின் தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, காணாமல்போனவர்களின் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் மீள நிகழாமையை நோக்கமாகக் கொண்டுள்ளன தொடர்புடைய நிறுவனச் சீர்திருத்தங்கள் மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை செயற்படுத்துவதற்காக பிரதம மந்திரியின் தலைமையிலான இடை அமைச்சர்கள் குழு உட்பட ஏனைய நம்பிக்கையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை நிறுவுதல் ஆகியவை இதில் அடங்கும்.
வலியுறுத்தப்படுவதற்கும் மாறாக, சுகாதார மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் உட்பட இலங்கையின் தொழிலாளர் உரிமைகள் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரங்களுக்கு இயைபாக உள்ளன. உற்பத்தியில் பராமரிக்கப்படும் இலங்கையின் உயர் தொழிலாளர் தரநிலைகள் ஆடைத் துறையில் பிரதிபலிக்கும் வகையில் சிறந்த தரமான தயாரிப்புக்கள் மற்றும் உயர் பெறுமதி உட்சேர்க்கப்பட்ட ஏற்றுமதிக்கு வழிவகுத்தன. இலங்கையிலிருந்தான 'நெறிமுறை' தயாரிப்புக்களுக்கான அதிக தேவையானது, உற்பத்தியை அதிகரிப்பதற்கும், அடுத்தடுத்த முதலீடு மற்றும் இலங்கையில் மனித மூலதனத்தை மேம்படுத்துவதற்கும் வழிவகுத்தது. ஐரோப்பிய ஒன்றிய ஜி.எஸ்.பி. + சலுகைகள் இந்த செயன்முறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன, இதனால் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சந்தை ஆகியவற்றுக்கு பயன்களையளிக்கின்றது. இதேபோல், குறிப்பிடத்தக்கதொரு வளர்ச்சித் துறையான மீன்வளத் துறை, ஐரோப்பிய ஒன்றிய ஜி.எஸ்.பி + சலுகைகளால் பயனடைந்துள்ளது.
காலனித்துவத்திற்குப் பிந்தைய உலகின் மிகப் பழமையான ஜனநாயக நாடுகளில் ஒன்றாக இலங்கை நீண்டகாலமாக துடிப்பான ஜனநாயகத்தைக் கொண்டுள்ளது. நாட்டின் வலுவான வெளியுறவுக் கொள்கையானது நடுநிலைமை, அணிசேராமை மற்றும் நட்புறவு ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. அரசாங்கம் தனது ஜனநாயக நிறுவனங்களை மேலும் வலுப்படுத்துவதற்கு உறுதிபூண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட 2019ஆம் ஆண்டில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் பார்வையாளர் தூதரகத்தின் பேச்சாளர் வலியுறுத்தியதைப் போல, தேர்தல் வெளிவந்த அமைதியான சூழல் 'நாட்டின் ஜனநாயக நிறுவனங்களின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துகின்றது.' இந்தக் கருத்துக்கள் செல்லுபடியானதாகும்.
பாதுகாப்பு, சுகாதாரம், பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கைக்கான உரிமை ஆகியவற்றின் மீது கடுமையான தடைகளை ஏற்படுத்தி, கோவிட்-19 தொற்றுநோய் உலகளவில் பேரழிவு தரக்கூடிய தாக்கத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. தொற்றுநோய்க்கு எதிராக தனது ஒட்டுமொத்த மக்களையும் பாதுகாப்பதற்காகவும், தடுப்பூசிகளுக்கு சமமான அணுகலை வழங்குவதற்காகவும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகள் இருந்தபோதிலும் இலங்கை தொடர்ந்தும் சவால்களை எதிர்கொள்கின்றது. இந்தப் பின்னணியில், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுடன் உள்ளார்ந்த முறையில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து மக்களினதும் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான உலகளாவிய பன்முக நிறுவனங்கள் மற்றும் ஐ.நா. முகவர் நிறுவனங்களின் உறுதிப்பாட்டை அரசாங்கம் பாராட்டுகின்றது. இந்த முயற்சிகளின் முன்னுரிமைகள் இலக்கு வைக்கப்பட்ட மக்களைத் தூண்டுவதோடு சுகாதார வசதிகளையும் பொருளாதார மறுமலர்ச்சியையும் அளித்து வருகின்ற போதிலும் இந்த முயற்சிகளில் முன்னேற்றம் கண்டு வருகின்றன.
இந்த சிக்கலான காலங்களில், நாட்டில் நிரூபிக்கப்பட்ட முன்னேற்றத்தை அறிந்து கொள்ளும் அதே நேரத்தில், தனது மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஆதரவுகளைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை தகுதியானது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான தனது கூட்டுறவை பரந்த அளவிலான விடயங்களில் தொடர்வதற்கு வெளிநாட்டு அமைச்சு எதிர்பார்ப்பதுடன், பரஸ்பரம் ஆர்வமுள்ள பகுதிகளில் செயலூக்கமாகவும் உற்பத்தி ரீதியாகவும் ஈடுபடுவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை உறுதிப்படுத்துகின்றது.
2021 ஜூன் 14ஆந் திகதி, திங்கட்கிழமை வெளிநாட்டு அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில், கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளின் தூதரகப் பொறுப்பாளர் தோர்ஸ்டன் பார்க்ஃப்ரெட் மற்றும் கொழும்பைத் தளமாகக் கொண்ட பிரான்ஸ், இத்தாலி, ருமேனியா, ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள் / தூதரகப் பொறுப்பாளர்களுக்கு வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன இலங்கை அரசாங்கத்தின் மேற்படி நிலைப்பாட்டை விவரித்தார். மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு