39 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

ஜூன் 18, 2021

ஊர்காவற்துறை, கரம்பன் பிரதேசத்தில் 130.76கிலோகிரம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படையின் வட பிராந்திய கட்டளையகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த படகு ஒன்றில் இருந்து 4 சாக்குகளில் பொதி செய்யப்பட்டிருந்த கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள கேரள கஞ்சாவின் சந்தைப் பெறுமதி சுமார் 39 மில்லியன் ரூபாவிற்கு அதிகம் என நம்பப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இருவரும் ஊர்காவற்றுறை மற்றும் பேசாலை பிரதேசங்களை வசிப்பிடமாக கொண்ட 26 மற்றும் 30 வயது உடையவர்கள் என கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இருவரும் கைப்பற்றப்பட்டுள்ள கேரள கஞ்சா, படகு என்பனவும் மேலதிக சட்ட நடவடிக்கைகளை ஊர்காவற்றுறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.