“திரிபீடகாபிவந்தனா” வாரத்தை முன்னிட்டு தேசிய ஊடக மையத்தில் விஷேட மத நிகழ்வு

மார்ச் 22, 2019

“திரிபீடகாபிவந்தனா” வாரத்தை முன்னிட்டு கொழும்பு தேசிய ஊடக மையத்தில் விஷேட மத நிகழ்வொன்று இன்று (மார்ச், 22) இடம்பெற்றது.

தேசிய ஊடக மைய கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இங்கு பணிபுரியும் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இதன்போது பேராசிரியர் சங்கைக்குரிய மெதகோட அபயதிஸ்ஸ தேரர் அவர்களால் திரிபீடகத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் தோற்றம் தொடர்பாக ஒரு விஷேட “தம்மாஹ்“ சொற்பொழிவும் நடாத்தப்பட்டது.

இதன் பின்னர், இந்நிலையத்தின் தலைவர் அவர்கள் சங்கைக்குரிய தேரர் அவர்களுக்கு “அடபிரிகர” வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வில், தலைவர், பிரதம நிறைவேற்று அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட இங்கு பணிபுரியும் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

உலக பாரம்பரிய மரபுரிமை சொத்தாக பெளத்தர்களின் புனித நூலான தேரவாத திரிபிடகம் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரைக்கமைய 'திரிபிடகபிவந்தனா' வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய மரபுரிமையைக் கொண்ட தேரவாத திரிபிடகத்தினை உலகளாவிய பாரம்பரிய சொத்தாக யுனெஸ்கோ பிரகடனப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையுடன் 'திரிபிடகபிவந்தனா' வாரம் நாளை (மார்ச் , 23)நிறைவுபெறவுள்ளது. புனித தலதா மாளிகையில் இடம்பெறவுள்ள நிறைவு தின நிகழ்வில் மகா சங்கத்தினர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.