52 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

ஜூன் 21, 2021

யாழ்ப்பாணம் தொண்டமானாறு கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 174.05 கிலோ கிராம் கேரள கஞ்சா,கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு சகிதம் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இதன்போது 5 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளும் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள கேரள கஞ்சாவின் சந்தைப் பெறுமதி சுமால் 52 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது என கடற்படை தெரிவித்துள்ளது

சந்தேக நபர்கள் இருவரும் முல்லைத்தீவு மற்றும் பருத்தித்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 28 மற்றும் 34 வயதுகளை உடையவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் ஆகியோர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கடல் வழிகள் வழியாக போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பரந்த அளவிலான சட்டவிரோத செயல்களைத் தடுக்க தீவுப்பகுதி கடற் பிராந்தியங்களில் பல ரோந்துப் பணிகளைத் தொடங்கியுள்ளதாகவும் கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு கடற்படை கட்டளை தலைமையிலான சிறப்பு படகு படைகளின் பி 177 ஆழ் கடல் ரோந்து படகு, மற்றும் இசட் 196 மற்றும் இசட் 215 ஆகிய படகுகள் கடற்கரை பகுதியை நெருங்கிக்கொண்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமான டிங்கியை தடுத்து நிறுத்தியாக தெரிவிக்கப்படுகின்றது.

கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகள் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இடம்பெற்றதாக கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.